நாங்கள் 12 வருஷத்துக்கு முன்பே கொண்டு வந்துவிட்டோம் : அமித்ஷாவுக்கு பதில் கொடுத்த அமைச்சர் பொன்முடி

Amit Shah DMK
By Irumporai Nov 13, 2022 06:22 AM GMT
Report

12 ஆண்டுகளுக்கு முன்பே பொறியியல் கல்வியியானது தமிழில் திமுக அரசு அறிமுகம் செய்து விட்டதாக மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு ,அமைச்சர் பொன்முடி பதில் அளித்துள்ளார்.

தாய்மொழியில் பொறியியல் கல்வி : 

பொறியியல் பட்டப்படிப்பை முதன்முதலில் தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் 2010-ஆம் ஆண்டே அறிமுகப்படுத்தி விட்டார்.

இந்தியாவிலேயே முதல் மாநிலமாக பொறியியல் படிப்பினைத் தாய்மொழியில் கற்க ஏற்பாடு செய்து, அண்ணா பல்கலைக்கழகத்தில் கட்டட (சிவில்) மற்றும் இயந்திரப் (மெக்கானிக்கல்) பொறியியல் படிப்புகளைத் தமிழில் அறிமுகம் செய்து, தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட தமிழில் பொறியியல் கல்வி இன்றும் நடைமுறையில் உள்ளது.

நாங்கள் 12 வருஷத்துக்கு முன்பே கொண்டு வந்துவிட்டோம் : அமித்ஷாவுக்கு பதில் கொடுத்த அமைச்சர் பொன்முடி | Enginering Ponmudi Reply To Amit Shah

அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளிலும் தமிழில் பொறியியல் படிப்பு நடைமுறையில் உள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

தமிழில் பொறியியல் கல்வி படித்து பி.இ., பட்டம் பெற்ற தமிழக இளைஞர்கள் இன்றைக்குப் பொதுப்பணித்துறை, வீட்டுவசதி வாரியம், மெட்ரோ ரெயில் திட்டம், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், நெடுஞ்சாலைத்துறை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் போன்ற பல துறைகளில் பொறியாளர்களாகவும், பல பன்னாட்டு நிறுவனங்களின் உயர்பதவிகளை அலங்கரிப்பவர்களாகவும் பணியாற்றி வருகிறார்கள்.

தமிழக அரசு நடவடிக்கை

ஏன், அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழ்வழியில் பொறியியல் படிப்பில் பட்டம் பெற்ற செல்வி. ஐஸ்வர்யா அவர்கள்தான் 2020-ஆம் ஆண்டு குடிமைப் பணித் தேர்வில் (IAS) வெற்றி பெற்றுள்ளார். 12 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்வழியில் பொறியியல் கல்வி தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு விட்டாலும், மருத்துவப் படிப்பு, அதாவது எம்.பி.பி.எஸ் தமிழில் கற்பதற்கும் வழி செய்யவும் இப்போது தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

அதற்காக மூன்று பேராசிரியர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, எம்.பி.பி.எஸ் முதலாண்டு பாடப் புத்தகங்களை தமிழில் மொழிபெயர்க்கும் பணிகள் சுறுசுறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எங்கள் அன்னைத் தமிழ்மீது காட்டியுள்ள அக்கறையோடு, சமஸ்கிருதத்திற்கு இணையாக உயர்தனிச் செம்மொழியாம் தமிழின் வளர்ச்சிக்கு ஒன்றிய அரசின் நிதியுதவி அளித்திடவும்; மாண்புமிகு உள்துறை மந்திரியே ஒப்புக் கொண்டிருப்பது போல், தொன்மை வாய்ந்த தமிழ் மொழிக்கு உரிய ஆட்சி மொழித் தகுதியை மத்திய அரசு அலுவலகங்களில் அளித்திடவும் தேவையான முயற்சிகளை எடுத்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

குறிப்பாகத் தமிழகத்தில் மத்திய அரசு நடத்தும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் கட்டாயத் தமிழ் பாடத்திட்டத்தை அமல்படுத்தவும், டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பல ஆண்டுகளாக காலியாக உள்ள தமிழ்ப் பேராசிரியர் பணியிடங்களை உடனே நிரப்பித் தர வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.