சதமடித்து அதிரடி காட்டிய ஜோஸ் பட்லர் - போராடி தோற்ற இலங்கை
டி20 உலக கோப்பை தொடரில் இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
சார்ஜா மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜோஸ் பட்லர் ஆட்டமிழக்காமல் 101 ரன்கள் குவித்தார்.
கேப்டன் இயான் மோர்கன் தன் பங்கிற்கு 40 ரன்கள் எடுக்க நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்கள் எடுத்தது. இலங்கை அணி தரப்பில் ஹசரங்கா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
தொடர்ந்து 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனால் 19 ஓவர்களில் இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 140 ரன்கள் மட்டுமே எடுத்து 26 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.