மிரட்டியெடுத்த ஜோஸ் பட்லர் - ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி
டி20 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
டி20 உலகக்கோப்பையில் துபாய் சர்வதேச மைதானத்தில் இன்று நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் அதிகப்பட்சமாக தொடக்க வீரர் ஆரோன் பின்ச் 44 ரன்கள் எடுக்க நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 125 ரன்கள் மட்டுமே எடுத்தது. இங்கிலாந்து அணியின் சார்பில் கிறிஸ் ஜோர்டன் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளும், வோக்ஸ் மற்றும் மில்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இதனை தொடர்ந்து 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து தொடக்க வீரர் ஜோஸ் பட்லர் ஆஸ்திரேலியா அணியின் பந்துவீச்சை வெளுத்தெடுத்தார். தொடர்ந்து மிரட்டிய பட்லர் 71 ரன்கள் எடுக்க இங்கிலாந்து அணி 11.4 ஒவர்களிலேயே 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 126 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. ஆஸ்திரேலியா அணியின் சார்பில் அஸ்டன் அகர் மற்றும் சாம்பா ஆகியோர் தலா 1 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.