நேஷனல் ஹெரால்டு அலுவலகத்திற்கு சீல்!
டெல்லியில் உள்ள நேஷனல் ஹெரால்டு அலுவலகத்திற்கு அமலாக்கத்துறை சீல் வைத்துள்ளது.
பொருளாதார நெருக்கடி
2008ஆம் ஆண்டில் அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் நிறுவனம் கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்தது. அதே ஆண்டில் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை நிறுத்தப்பட்டது. இந்த நிறுவனத்தின் மூலம் அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு ரூ.90 கோடி ரூபாய் கடன் வழங்கப்படுகிறது.

இதனடிப்படையில் 2016ஆம் ஆண்டில் நேஷனல் ஹெரால்டு மீண்டும் தொடங்கப்பட்டது. இந்த நிலையில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி 2012ஆம் ஆண்டு சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு எதிராக வழக்கு ஒன்றை தொடர்கிறார்.
பண மோசடி
அதில், 2011ஆம் ஆண்டு வெறும் ரூ.50 லட்சம் மதிப்பில் தொடங்கப்பட்ட யங் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற போலி நிறுவனம் மூலம் ரூ.90 கோடி கடன் அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த கடனுக்காக டெல்லியில் உள்ள ஹெரால்டு ஹவுஸ் கட்டடம் உள்பட ரூ.2,000 கோடி மதிப்பிலான சொத்துக்களை யங் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் கையகப்படுத்தியுள்ளது.
சம்மன்
இந்த வழக்கை அமலாக்கத்துறை விசாரித்துவருகிறது. இதுகுறித்து விசாரணைக்காக சோனியா காந்தி, ராகுல்காந்தி இருவரும் டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகும்படி கடந்த ஜூன் 8ஆம் தேதி சம்மன் அனுப்பப்பட்டது.
அதன்படி ராகுல்காந்தி ஜூன் 13ஆம் தேதி ஆஜரானார். அவரிடம் தொடர்ந்து 5 நாள்களுக்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டது. இதையடுத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடமும் இரண்டு வாரங்களுக்கு முன்பு இரண்டு கட்டங்களாக விசாரணை நடத்தப்பட்டது.
அலுவலகத்திற்கு சீல்
இந்த நிலையில் டெல்லியில் உள்ள நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் தலைமை அலுவலம் உள்பட 11 இடங்களில் அமலாக்கதுறை அலுவலர்கள் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் முக்கிய ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து நேஷனல் ஹெரால்டு அலுவலகத்திற்கு அமலாக்கத்துறையால் சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் தங்கள் ஒப்புதல் இல்லாமல் அலுவலகத்தை திறக்க கூடாது எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.