செந்தில் பாலாஜி,பொன்முடி.. அடுத்து அனிதா ராதாகிருஷ்ணன் - அமலாக்கத்துறை செக்!
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு தூத்துக்குடி முதன்மை குற்றவியல் சிறப்பு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
சொத்துக்குவிப்பு வழக்கு
2001-2006 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்காலத்தில் வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்த அனிதா ராதாகிருஷ்ணன் மீது 2006-2011 ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்த திமுக வருமானத்திற்கும் மீறி சொத்து சேர்த்ததாக வழக்கு தொடுத்தது. இதனை தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புதுறை கடந்த 2006ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது. இந்த வழக்கு தூத்துக்குடி முதன்மை குற்றவியல் சிறப்பு நீதிமன்றத்தில் தொடர்ந்து நடந்து வருகிறது.
அமலாக்கத்துறை கோரிக்கை
இந்நிலையில் இதில் சட்ட விரோத பணப் பரிமாற்றம் நடந்திருக்கலாம் என்று அமலாக்கத்துறை குற்றச்சாட்டு வைத்தது. பின்னர் வழக்குப் பதிவு செய்த அமலாக்கத்துறை அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களிடம் விசாரணை நடத்தி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அவர்களுக்கு சொந்தமான 6 கொடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை முடக்கியது.
இதைத்தொடர்ந்து சொத்துக்களை முடக்கியதற்கும், தன் மீது பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக் கோரியும் அனிதா ராதாகிருஷ்ணன் சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக எங்களிடம் முக்கியமான ஆதாரங்கள் இருப்பதாகவும் சொத்துக்குவிப்பு வழக்கில் விஜிலென்ஸ் மற்றும் ஊழல் தடுப்பு இயக்குநரகம் எங்களுடன் இனைந்து பணியாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து அமலாக்கத்துறை தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஏற்கனவே மனு தாக்கல் செய்துள்ளது.
இந்நிலையில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு இன்று தூத்துக்குடி முதன்மை குற்றவியல் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. அமைச்சர் செந்தில் பாலாஜி, பொன்முடியை அடுத்து அனிதா ராதாகிருஷ்ணனை அமலாக்கத்துறை குறி வைத்துள்ளது.