காலியாக இருந்த இருக்கைகள் படம்பிடித்த செய்தியாளர்கள் மீது தாக்குதல்
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் பொதுமக்கள் யாரும் பங்கேற்காத காரணத்தால் , அரங்கு வெறிச்சோடி இருந்தது. இதனை படம் பிடித்த செய்தியாளர்களை அதிமுக நிர்வாகி ஒருவர் தாக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் வாங்கல், தண்ணீர் பந்தல் பாளையம் பகுதியில் உழவன் திருவிழா விவசாயிகள் மாநாட்டில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார்.
முதல்வர் வருகைக்கு முன்பு காலியாக இருந்த இருக்கைகளை செய்தியாளர் ஒருவர் புகைப்படம் எடுத்தார். அப்போது அதிமுக நிர்வாகி ஒருவர் அவரது செல்போனை பறித்து வைத்ததுடன், செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த செய்தியாளரை தாக்கியுள்ளார்.

மேலும், நிகழ்ச்சியில் செய்தியாளர்கள் அமர்வதற்கு இருக்கைகள் ஏற்பாடு செய்யப்படாததால், நின்று கொண்டிருந்த செய்தியாளர்கள் மீது சிலர் தண்ணீர் பாட்டில்களை வீசியுள்ளனர். இவ்வாறு அங்கு நடைபெற்ற பல்வேறு முறையற்ற சம்பவங்களை கண்டித்து செய்தியாளர்கள் அனைவரும் ஒட்டு மொத்தமாக நிகழ்ச்சியை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.
மேலும், அவர்கள் ஏற்பாடு செய்த வாகனத்தை புறக்கணித்து பேருந்து நிறுத்தம் வரை நடந்து சென்று சரக்கு வாகனத்தில் ஏறி சென்றனர்.