"வேலை சொல்லியே கொல்றாங்க" - பணிபுரியும் நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்த நபர்

1 week ago

மிகவும் சலிப்பான வேலையை கொடுத்த நிறுவனத்திற்கு எதிராக நபர் ஒருவர்  வழக்கு தொடர்ந்த சம்பவம் பிரான்சில் நடைபெற்றுள்ளது.

அங்குள்ள பாரீஸ் நகரை சேர்ந்த ஃபிரடெரிக் டெஸ்னார்ட் (Frederic Desnard) என்ற பிரெஞ்சு மனிதரே வேலை செய்த நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்தவர் ஆவார். பிரான்சில் உள்ள ஆடம்பர வாசனை திரவியங்கள் தயாரிப்பு நிறுவனமான Interparfums மீது தான் ஃபிரடெரிக் டெஸ்னார்ட் வழக்கு தொடர்ந்தார்.

2015-ஆம் ஆண்டு வரை இன்டர்பர்ஃபும்ஸ் (Interparfums) வாசனை திரவியங்கள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் மேமேஜராக பணியாற்றிய ஃபிரடெரிக் டெஸ்னார்ட், தனது வேலையில் சலிப்படைந்ததற்காக அடுத்த ஆண்டு அதாவது 2016 ஆம் ஆண்டு Interparfums நிறுவனம் மீது வழக்குத் தொடர்ந்தார். 

 Interparfums நிறுவனத்திற்கு எதிரான தனது மனுவில் ஃபிரடெரிக் டெஸ்னார்ட் தனது வேலை மிகவும் சலிப்பாக (போராக) இருந்தது. போரடித்த வேலை காரணமாக அது என்னை மனச்சோர்வுக்கு ஆளாக்கியது. மனதளவில் மிகவும் பாதிப்பை உண்டாக்கி வரும் இந்த வேலையை விட்டுவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இது தவிர தான் ஒரு முக்கியமான வாடிக்கையாளரை இழந்த பிறகு, எனது வேலை லெவலில் இருந்து தரமிறக்கப்பட்டேன். இதன் பின்னர் அலுவலகத்தில் எனக்கு சிறிய பணிகளே ஒதுக்கப்பட்டன. 

நிறுவனத்தின் இந்த செயலால் இனி எனக்கு எதற்கும் ஆற்றல் இல்லை என்ற அளவில் முத்திரை குத்தப்பட்டேன். ஒரு பெரிய வேலையையும் செய்யாமல் சம்பளம் வாங்கும் குற்ற உணர்ச்சியும் வெட்கமும் அடைந்தேன். இதனால் எனது மனநலம் மோசமடைந்த போது மருத்துவர்கள் பரிந்துரைத்ததால் 6 மாதங்களுக்கு விடுப்பு எடுத்தேன். எனினும் இறுதியில் நிறுவனத்தால் பணிநீக்கம் செய்யப்பட்டேன் என்று கூறி இருந்தார். வழக்கு விசாரணையின் போது டெஸ்னார்ட்டின் வழக்கறிஞர் அவர் 'போர்-அவுட்' எனப்படும் ஒரு நிலையை அனுபவித்ததாகக் குறிப்பிட்டார். இது கடுமையான சலிப்பு நிலை, இது மனச்சோர்வுக்கு வழிவகுக்கும் என கூறினார்.

வழக்கை விரிவாக விசாரித்த நீதிமன்றம் டெஸ்னார்ட்டின் உடல்நிலை மோசமடைந்ததற்கும் அவரது பணியில் ஏற்பட்ட மாற்றங்களுக்கும் இடையே உறுதியான தொடர்பு இருப்பதை உணர்வதாக குறிப்பிட்டது. ஏற்கனவே கீழமை நீதிமன்றம் டெஸ்னார்ட்டிற்க்கு ஆதரவாக தீர்ப்பளித்திருந்த நிலையில், சமீபத்தில் பாரிஸ் மேல்முறையீட்டு நீதிமன்றம் அந்த தீர்ப்பை உறுதி செய்து டெஸ்னார்ட்டிற்கு 40,000 யூரோக்கள் அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.33,83,107 வழங்க உத்தரவிட்டு உள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பு desk job ஊழியர்களுக்கு நிச்சயமாக நிறைய நம்பிக்கையை அளித்துள்ளது.


உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்