சம்பளத்துடன் ஒரு வருடம் விடுமுறை - ஊழியரை ஆச்சர்யப்படுத்திய நிறுவனம்!
போட்டியில் முதல் பரிசு பெற்றவருக்கு, சம்பளத்துடன் ஒரு வருடம் விடுப்பு வழங்கப்பட்டுள்ளது.
போட்டியில் வெற்றி
சீனா, டென்ஜன் நகரை சேர்ந்த ஒரு நிறுவனம் அதன் ஆண்டு விழாவை கொரோனா பாதிப்புக்குப் பிறகு, அதாவது மூன்று வருடங்கள் கழித்து மிகவும் கோலாகலமாக கொண்டாட முடிவு செய்தனர். அதனால், ஊழியர்கள் அவர்கள் குடும்பத்தினருடன் விருந்து உண்ணலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், நடத்தப்படும் போட்டியில் வெற்றி பெறும் ஊழியருக்கு ஒரு வருடம் சம்பளத்துடன் கூடிய விடுமுறை எனக் கூறி அனைவரையும் திகைக்க வைத்தது. அதேபோல் தோல்வியடைந்தால் அதே ஹோட்டலில் ஒருநாள் வெயிட்டராக வேலை செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
1 வருடம் லீவு
அதன்படி, போட்டியில் வெற்றி பெற்ற ஊழியர் ஒருவருக்கு சம்பளமும் கொடுத்து 365 நாள்கள் விடுமுறையும் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நிறுவன ஊழியர் ஷென் கூறுகையில், “இந்தப் போட்டியில் வெற்றிபெற்றவரை தவிர மற்றவர்களுக்கு சில நாள்கள் விடுமுறை, வருடத்தில் சில சலுகைகள் எனச் சிறிய பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஆனால் முதல் பரிசை நம்பமுடியவில்லை. வெற்றியாளர் ஒரு நிர்வாகப் பதவியை வகிக்கிறார், அதனால் அவருக்கு வருடம் முழுவதும் விடுமுறை அளிப்பது சாத்தியமில்லை. அவர் தன் பரிசை அப்படியே ஏற்றுக்கொள்கிறாரா, அல்லது அதற்கு பதில் பணமாக பெற்றுக்கொள்கிறாரா என்பது தெரியவில்லை” எனத் தெரிவித்துள்ளார். அதுகுறித்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.