தாமதமாகும் பதவியேற்பு- விஜய் வீட்டில் அவசர ஆலோசனை கூட்டம்!
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையை நிரூபிக்காத வரை, தமிழக வெற்றிக் கழகம் (TVK) தலைவர் விஜய் முதலமைச்சராகப் பதவியேற்க முடியாது என்று ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளதைத் தொடர்ந்து, பனையூரில் உள்ள விஜய் வீட்டில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகின்றது.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இருப்பினும் பெரும்பான்மைமையை நிரூபிக்க முடியாததால், ஆட்சி அமைக்க முடியாத நிலையில் தவெகவின் நிலைப்பாடு உள்ளது.

ஆளுநரை தெவெக தலைவர் விஜய் 2 முறை சந்தித்த போதிலும், ஆட்சியமைக்க இதுவரை அழைக்காதது குறித்து செய்தி நிறுவனம் ஒன்றிற்கு ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் விளக்கமளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் தற்போது நிலவும் அரசியல் குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கத் தாம் தயாராக இருப்பதாகவும், அதே சமயம், ஆட்சி அமைக்க உரிமை கோரும் கட்சி, பெரும்பான்மையை நிரூபிக்கத் தேவையான பலம் தங்களிடம் உள்ளது என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் கூறினார்.
மேலும், ஆளுநர் மாளிகையில் எம்.எல்.ஏ.க்களை நேரில் காட்டி பெரும்பான்மையை நிரூபிக்கச் சொல்லவில்லை என்றும், அந்த பலப்பரீட்சை சட்டசபையிலேயே நடக்கும் என்றும் விவரித்தார். பெரும்பான்மை இல்லாத அரசு பதவி ஏற்ற பிறகு, ஆதரவு திரட்ட குதிரை பேரத்தில் ஈடுபடுவதை தாம் எப்படி அனுமதிக்க முடியும் என்றும் இது ஜனநாயகத்திற்கு மிகவும் கேடானது என்றும் விவரித்துள்ள ஆளுநர் ராஜேந்திர அர்லேகர், தமிழ்நாட்டு மக்கள் மீது தனக்கு அக்கறை உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் தவெகவிற்கு ஆதரவு தருவதாக கம்யூனிஸ்ட் கட்சிகள் இன்று ஆலோசனை மேற்கொண்டு வருகின்றன. கம்யூனிஸ்ட் கட்சிகளின் முடிவை பொறுத்து விசிகவின் நிலைப்பாடு இருக்கும் என்று திருமாவளவன் தெரிவித்திருந்தார்.
இன்று மாலைக்குள் தவெகவிற்கு தேவையான 6 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கிடைக்குமா இல்லையா என்பது தெரியவந்துவிடும். இதனிடையே பனையூரில் உள்ள விஜய் வீட்டில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவு கிடைத்தால் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன? பெரும்பான்மையை நிரூபிக்க என்ன வழிகள்? என்ன என்பதும் குறித்தும் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இந்த கூட்டத்தில் என்.ஆனந்த், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார், அருண்ராஜ் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் பங்கேற்றுள்ளமை குறிப்பி்டத்தக்கது.