விமானத்தில் எமெர்ஜென்சி கதவை திறந்த பயணி - விசாரணைக்கு உத்தரவு!
எமெர்ஜென்சி கதவுகளைத் திறந்த விவகாரத்தில் விசாரணை நடத்த டிஜிசிஏ உத்தரவிட்டுள்ளது.
எமெர்ஜென்சி கதவு
சென்னையில் இருந்து திருச்சி செல்ல இண்டிகோ நிறுவன விமானம் ஒன்று தயார் நிலையில் இருந்தது. விமானத்தில் பயணிகள் வரிசையாக ஏறிக்கொண்டிருந்தனர். அப்போது பயணி ஒருவர் தவறுதலாக எமர்ஜென்ஸி கதவுகளைத் திறந்ததாகக் கூறப்படுகிறது.
இதனை உடனடியாக கவனித்த விமான பணியாளர்கள் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அவசரகால கதவு சரியாக பொருத்தப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து, அனைத்து எஞ்சினீயரிங் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன.
விசாரணை
இதனால் விமானம் சுமார் 42 நிமிடங்கள் தாமதமாகப் புறப்பட்டுச் சென்றது. கடந்த மாதம் நடந்த இந்த சம்பவம் தற்போதுதான் வெளிவந்துள்ளது. இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்ட இண்டிகோ நிறுவனம், எமெர்ஜென்சி கதவுகளைத் திறந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பயணி தங்களிடம் மன்னிப்பு கோரியதாக தெரிவித்திருந்தது.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் என்ன நடந்தது என விசாரித்து விசாரணை அறிக்கை சமர்பிக்கும்படி விமான கட்டுப்பாட்டு இயக்குநரகமான டிஜிசிஏ உத்தரவிட்டுள்ளது. விமானப் பாதுகாப்பில் எந்தவித சமரசமும் செய்துகொள்ளப்படவில்லை எனவும் கூறியுள்ளது.