அது நடந்தால் பில்கேட்ஸ் சொத்துகளை இழந்து திவால் ஆவார் - எச்சரிக்கும் எலான் மஸ்க்
பில்கேட்ஸ் திவால் ஆக கூடும் என எலான் மஸ்க் எச்சரித்துள்ளார்.
எலான் மஸ்க்
பிரபல தொழிலதிபரான எலான் மஸ்க் Tesla, SpaceX, Starlink, X(டிவிட்டர்) உட்பட பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகிறார்.
தற்போது உலக பணக்காரர் பட்டியலில் எலான் மஸ்க் முதலிடத்தில் உள்ளார். தனது எக்ஸ் தளத்தில் ஆக்ட்டிவாக உள்ள எலான் மஸ்க் அவ்வப்போது கூறும் கருத்துகள் வைரலாகும்.
பில்கேட்ஸ் திவால்
அதே போல் தற்போது மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் பணத்தை இழந்து திவால் ஆவார் என எச்சரித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாகவே அவ்வப்போது எலான் மஸ்கும், பில்கேட்ஸும் மாறி மாறி குற்றஞ்சாட்டி வந்தனர்.
இந்நிலையில், "பல ஆண்டுகளுக்கு முன்பு டெஸ்லா நிறுவனத்தின் செயல்பாடு மோசமாக இருந்தபோது இந்த நிறுவனம் தேறாது என்பதன் அடிப்படையில் டெஸ்லாவுக்கு எதிராக பில்கேட்ஸ் பெரிய முதலீட்டை செய்தார். டெஸ்லா திவாலானால் பில்கேட்சுக்கு அதிக லாபம் கிடைக்கும். ஆனால் உலகின் முன்னணி நிறுவனமாக டெஸ்லா உருவெடுக்கும்பட்சத்தில் அது அவரை திவாலாக்ககூடும்" என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
தற்போது டெஸ்லா நிறுவனத்தின் சந்தை மதிப்பு 1.251 டிரில்லியன் டாலராக உள்ளது. அதே வேளையில் மைக்ரோசாப்ட்டின் சந்தை மதிப்பு 3.316 டிரில்லியன் டாலராக உள்ளது. எலான் மஸ்க் 400 பில்லியன் டாலர் சொத்து மதிப்புள்ள உலகின் முதல் மனிதராக உருவெடுத்துள்ளார். அதே வேளையில், பில்கேட்ஸ் உலக பணக்காரர் பட்டியலில் 7 வது இடத்தில் உள்ளார்.