இந்தியாவிற்கு எதிர்காலத்தில் வர உள்ள பெரிய ஆபத்து - எலான் மஸ்க் எச்சரிக்கை
இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு எலான் மஸ்க் முக்கிய எச்சரிக்கையை வழங்கியுள்ளார்.
எலான் மஸ்க்
உலக பணக்கார பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க். இவர் Tesla, SpaceX, Starlink, X உட்பட பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் எலான் மஸ்க் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு முக்கிய எச்சரிக்கை ஒன்றை வழங்கியுள்ளார்.
மக்கள் தொகை சரிவு
மக்கள் தொகை சரிவு உலகளவில் பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. மக்கள் தொகையில் உலகில் முதலிடம் வகித்து வந்த சீனா, பல ஆண்டுகளுக்கு முன்னர் மக்கள் தொகையை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. தற்போது மக்கள் தொகை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், மக்கள் தொகையை அதிகரிக்க பல முயற்சிகளை கையில் எடுத்துள்ளது.
சீனா மட்டுமல்லாது, ரஷ்யா, ஜப்பான், சிங்கப்பூர், இத்தாலி, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளில் குழந்தை பிறப்பு விகிதம் வெகுவாக குறைந்துள்ளது. சமீபத்தில் கருவுறுதல் வீதம் குறைவது குறித்து பேசிய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, "இனி 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்கள் மட்டுமே உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தகுதியானவர்கள் என சட்டம் கொண்டு வர ஆலோசித்து வருகிறோம்" என கூறினார்.
இந்தியா
இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள எலான் மஸ்க், "தற்போது 1.5 பில்லியனாக உள்ள இந்திய மக்கள் தொகை 1 பில்லியன் ஆக குறையும். சீனாவில் 1.5 பில்லியனாக உள்ள சீன மக்கள் தொகை 730 மில்லியனாக குறையும். இது வரும் 100 ஆண்டுகளில் நடைபெறலாம்.
இது போன்று அமெரிக்கா, பாகிஸ்தான், நைஜீரியா, இந்தோனிசியா, எத்தியோப்பியா உள்ளிட்ட நாடுகளின் மக்கள் தொகையிலும் மாற்றம் ஏற்படும்" என தெரிவித்துள்ளார்.