எலான் மஸ்க்கிடம் அமெரிக்க அதிகாரிகள் விசாரணை...! - நடந்தது என்ன? வெளியான தகவல்...!
எலான் மஸ்க்கிடம் அமெரிக்க அதிகாரிகள் டுவிட்டரை வாங்கும் ஒப்பந்தம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
எலான் மஸ்க்
டுவிட்டரை 44 பில்லியன் டாலருக்கு வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட டெஸ்லா தலைமை நிர்வாகி எலான் மஸ்க், தனது முன்னுரிமைகளில் ஒன்று “ஸ்பேம் போட்களை” அகற்றுவது என்று டுவீட் செய்த சில நாட்களுக்குப் பிறகு, டுவிட்டர் நிறுவனத்தை வாங்கும் ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக கூறினார்.
டுவிட்டரில் உள்ள போலி கணக்குகள் குறித்து உண்மையான தரவுகளை பொதுவெளியில் ஆதாரத்துடன் வழங்காத வரை டுவிட்டர் ஒப்பந்தம் முன்னோக்கி நகராது என்று தெரிவித்து எலான் மஸ்க் ஒப்பந்தத்திலிருந்து பின் வாங்கினார்.
வழக்கு தொடர்ந்த டுவிட்டர் நிறுவனம்
இதனையடுத்து, எலான் மஸ்க் மீது டுவிட்டர் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.
அந்த வழக்கு மனுவில், டுவிட்டரின் போலி கணக்குகள் விவரம் வேண்டும்' என்ற பெயரில் பொய்யாக காரணம் காட்டி, இந்த ஒப்பந்தத்திலிருந்து எலான் மஸ்க் விலக முயற்சி செய்கிறார் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணை கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

சட்ட அமலாக்க துறை அதிகாரிகள் விசாரணை
இந்த வழக்கு குறித்து எலான் மஸ்கிடம், சட்ட அமலாக்க துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக டுவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான விவரங்களை தருமாறு எலான் மஸ்க் தரப்பிடம் பலமுறை கேட்டும், இன்னும் வழங்கவில்லை எனவும் டுவிட்டர் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், டுவிட்டரை 54.20 பில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்க கடந்த வாரம் எலான் மஸ்க் சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருந்தாலும், கோர்ட்டு பிறப்பித்த உத்தரவுப்படி, வரும் 28ம் தேதி வரை டுவிட்டரை வாங்கும் ஒப்பந்தத்தை மீண்டும் மேற்கொள்ள முடியாது என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.