அழியும் நிலையில் ஜப்பான் ... எச்சரிக்கை விடுக்கும் எலான் மஸ்க்...
ஜப்பான் நாடு விரைவில் அழியும் என டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக கடுமையான எல்லை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் ஜப்பானில் வெளிநாட்டு மக்களின் எண்ணிக்கை வரவு சரிவை சந்தித்தது. அதேசமயம் இறப்பு எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. ஏற்கனவே ஜப்பான் வயதானவர்கள் அதிகம் உள்ள நாடாக இருக்கும் நிலையில் தற்போது மக்கள் தொகையும் சரிவு அந்நாட்டின் பொருளாதாரத்தை உலுக்கியுள்ளது.
2021ஆம் ஆண்டு அக்டோபர் 1 ஆம் தேதியின் படி ஜப்பான் மக்கள்தொகை 125,502,000 ஆக உள்ளது. இது கடந்த 2020 ஆம் ஆண்டை விடவும் 644,000 குறைவு. அதுமட்டுமல்லாமல் அங்கு 11 ஆண்டுகளாக மக்கள் தொகை எண்ணிக்கை சரிந்து வருவது கவனிக்கத்தக்க ஒன்றாக உள்ளது.
இதுதான் ஜப்பான் 1950 முதல் வருடாந்திர மக்கள் தொகை கணக்கை நிர்வாகம் செய்து வரும் நிலையில் மிக மோசமான சரிவாகும். எனவே இறப்பு விகிதத்தைக் காட்டிலும், பிறப்பு விகிதத்தை அதிகரிக்க ஜப்பான் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இல்லையெனில் ஜப்பான் அழியும் நிலை வரலாம் எனவும் எலான் மஸ்க் ட்விட்டரில் எச்சரித்துள்ளார். மேலும் ஜப்பானின் இழப்பு உலக நாடுகளுக்குப் பெரும் இழப்பு என எலான் மஸ்க் கூறியுள்ளார்.
சமீபத்தில் இதே பிரச்சனையின் காரணமாகச் சீனா தனது குழந்தை பெற்றுக்கொள்ளும் விதிகளைத் தளர்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது.