டிரம்பை டுவிட்டரில் மீண்டும் சேர்க்கலாமா? எலான் மஸ்க் வாக்கெடுப்பு...!
எலான் மஸ்க், டிரம்பிற்கு மீண்டும் அவரது டுவிட்டர் கணக்கை பயன்படுத்த அனுமதி கொடுக்கலாமா? என்று டுவிட்டரில் வாக்கெடுப்பை தொடங்கியிருக்கிறார்.
தேர்தலில் தோல்வியுற்ற டிரம்ப்
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் இருந்தது 4 ஆண்டுகள் தான். ஆனால் 4 ஆண்டுகளில் எந்த அமெரிக்க அதிபரும் சந்திக்காத சர்ச்சைகளுக்கு உள்ளானார் டிரம்ப். கடந்த 2020ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடனால் டிரம்ப் தோற்கடிக்கப்பட்டார்.
கடந்த 2021ம் ஆண்டு ஜனவரியில் ஜோ பைடன் 46-வது அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றார். ஆனால் தேர்தல் முடிவுகளை டிரம்ப் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. டிரம்ப் ஆதரவாளர்கள் அமெரிக்க நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு வன்முறை வெறியாட்டம் நடத்தினர்.
அதனைத் தொடர்ந்து டிரம்ப்பின் அனைத்து சமூக ஊடக கணக்குகளும் அந்தந்த நிறுவனங்களால் முடக்கப்பட்டன. டிரம்ப்பின் கணக்குகளை இனி எப்போதும் அனுமதிக்கப்போவதில்லை என்றும் அறிவித்துவிட்டன.
டிரம்ப் மீது வழக்குப்பதிவு
நாடாளுமன்றத்தில் வன்முறையைத் தூண்டினார் என டிரம்ப் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டன. சமூக ஊடகங்களில் முடக்கப்பட்டதால் டிரம்ப் தனக்கென தனியாக ஒரு வலைத்தளத்தை உருவாக்கினார்.
இதன் மூலம் தொடர்ந்து இயங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தொடங்கிய ஒரு மாதத்திற்குள்ளே அதனை மூடிவிட்டார் டிரம்ப். இனி ட்ரம்ப்பின் அடுத்த திட்டம் என்னவாக இருக்கும் என அவருடைய ஆதரவாளர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர். தோல்விக்குப் பிறகு அதிகமாக பொதுவெளியில் தலைகாட்டாத டிரம்ப் ஃப்ளோரிடாவில் உள்ள அவருடைய அப்பார்ட்மண்டில் வசித்து வருகிறார்.

மீண்டும் அதிபர் பதவிக்கு போட்டி
முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் 2024ம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடப்போவதாக தற்போது அறிவித்துள்ளார். மேலும், அமெரிக்காவின் மறுபிரவேசம் இப்போதே தொடங்குகிறது, அமெரிக்காவை மீண்டும் சிறந்த மற்றும் புகழ்பெற்றதாக மாற்ற நான் ஓடிக்கொண்டிருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
எலான் மஸ்க் வாக்கெடுப்பு
இந்நிலையில், தற்போது டுவிட்டரை வாங்கியுள்ள எலான் மஸ்க், டிரம்பிற்கு மீண்டும் அவரது டுவிட்டர் கணக்கை பயன்படுத்த அனுமதி கொடுக்கலாமா? என்று டுவிட்டரில் வாக்கெடுப்பை தொடங்கியிருக்கிறார். இந்த வாக்கெடுப்பில் பெரும்பாலானவர்கள் டிரம்பை சேர்க்கலாம் என்று பதிவிட்டு வருகிறார்கள்.
Reinstate former President Trump
— Elon Musk (@elonmusk) November 19, 2022