இந்தியாவிற்கு ஐ.நாவில் இடமில்லாதது அபத்தம்; எலான் மஸ்க் திடீர் ஆதரவு - உற்றுநோக்கும் உலக நாடுகள்!
ஐ.நா சபையில் இந்தியாவிற்கு நிரந்தர இடமில்லாதது மிகவும் அபத்தமானது என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
ஐநாவில் இந்தியா
ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா, பிரான்ஸ், சீனா, ரஷியா, இங்கிலாந்து போன்ற 5 நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன.
ஐ.நாவில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை ரத்து செய்யும் வீட்டோ எனப்படும் உரிமை இந்த நாடுகளுக்கு மட்டும்தான் உள்ளன. இதில் இந்தியா, தென்னாப்ரிக்கா உள்பட 193 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.
தற்போது ஐ.நாவின் நிரந்தர உறுப்பின நாடுகளை அதிகரிக்க வேண்டும் எனவும், இந்தியா, ஆப்ரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து வழங்க வேண்டுமென கோரிக்கை எழுந்து வருகின்றன.
எலான் மஸ்க் ஆதரவு
இந்நிலையில் ஐ.நாவின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், ஆப்ரிக்காவை சேர்ந்த நாடுகள் ஒன்றுகூட நிரந்தர உறுப்பினர் அந்தஸ்தை பெறவில்லை. ஐ.நா சபை இன்னும் 80 ஆண்டுகளுக்கு முன் இருப்பதை போல் இருக்கக்கூடாது.
செப்டம்பரில் நடக்கவுள்ள எதிர்கால உச்சி மாநாடு உலகளாவிய நிர்வாக சீர்திருத்தங்களை பரிசீலிக்க மற்றும் நம்பிக்கையை மீண்டும் உருவாக்குவதற்கான வாய்ப்பாக இருக்கும் என தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதற்கு இஸ்ரேலைச் சேர்ந்த அமெரிக்க தொழிலதிபர் மைக்கேல் ஐசென்பெர்க் இந்தியாவிற்கும் நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து கிடைக்கவில்லை என பதிவிட்டிருந்தார்.
இதற்கு டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க், ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்புகளை சீர்திருத்தம் செய்ய வேண்டும். ஆனால், அதில் உள்ள பிரச்சினை என்னவென்றால் அதிக அதிகாரம் வைத்துள்ளவர்கள் அதனை விட்டுத் தர விரும்பவில்லை.
உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இருந்தாலும் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் இல்லை என்பது அபத்தமானது. ஆப்பிரிக்காவும் நிரந்தரம் இடம் கொண்டிருக்க வேண்டும் என்றுக் குறிப்பிட்டுள்ளார். இந்தப் பதிவு தற்போது கவனம் பெற்று வருகிறது.