பாஜகவில் இணைந்த பெண் தாதா எழிலரசி - காவல்துறையால் கைது!
காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் தாதா எழிலரசி (40). இவர் மீது கொலை (புதுச்சேரியின் முன்னாள் சபாநாயகர் கொலையாளி), கடத்தல், மிரட்டி பணம் பறித்தல், வெடிகுண்டு பயன்படுத்தி மிரட்டுதல், அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. கடந்த மாதம் 31ம் தேதி, மிரட்டி பணம் பறித்தல் வழக்கு தொடர்பாக, காரைக்கால் திருமலைராயன் பட்டினம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.
இதனால், காவல்துறையினர் எழிலரசியை தேடி வந்தார்கள். இந்நிலையில் புதுச்சேரி பாஜக மாநில தலைவரும், நியமன சட்டமன்ற உறுப்பினருமான சாமிநாதனின் முன்னிலையில் அவர் பாஜகவில் இணைந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து குற்றப் பின்னணியில் உள்ளவர்கள் பாஜக -வில் இணைந்து வருகிறார்கள் என்ற தகவல் வெளியானது.
தலைமறைவாக இருந்த பாஜகவைச் சேர்ந்த பெண் தாதா எழிலரசி தற்போது கைது செய்யப்பட்டிருக்கிறார். நாகூர் மெயின் ரோட்டில் காரில் பதுங்கியிருந்த தாதா எழிலரசியை போலீசார் கைது செய்துள்ளனர்.