புதிதாக பிறந்த புனீத் ராஜ்குமார் - ரசிகர்கள் நெகிழ்ச்சி
மறைந்த கன்னட நடிகர் புனீத் ராஜ்குமாரின் பெயர் குட்டி யானை ஒன்றுக்கு சூட்டப்பட்டுள்ளது.
பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் (46) கடந்த அக்டோபர் மாதம் 29 ஆம் தேதி உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தபோது மாரடைப்பு காரணமாக திடீரென்று மரணமடைந்தார். அவர் உடல் பெங்களூரு கண்டீரவா ஸ்டூடியோவில் நல்லடக்கம் செய்யப்பட்டது. புனீத்தின் மறைவு கன்னட ரசிகர்கள் மத்தியிலும் இந்திய திரையுலகிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், மறைந்த நடிகர் புனீத் ராஜ்குமார் கடந்த மாதம் கர்நாடக மாநிலம் சிவமோகா மாவட்டத்தில் உள்ள சக்ரேபைலு யானைகள் பயிற்சி முகாமுக்கு (Sakrebailu Elephant Training Camp) சென்றிருந்தார்.
அங்கு யானைகள் பயிற்சிப் பெறுவதைக் கண்டு ரசித்தார். இதனால் அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக அங்குள்ள குட்டி யானை ஒன்றுக்கு புனீத் ராஜ்குமார் என பெயர் சூட்டியுள்ளனர். இதைத் துணை வன பாதுகாவலர் நாகராஜ் தெரிவித்துள்ளார்.
நேத்ரா என்ற யானைக்குப் பிறந்த அந்தக் குட்டி யானையை தாயிடம் இருந்து பிரிக்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. அந்தப் பகுதியினர் யானையை ’அப்பு’ (புனித் முதன்முதலாக ஹீரோவாக நடித்தப்படம். இது அவர் செல்லப் பெயர்) என்றழைப்பதாக வன அதிகாரிகள் தெரிவித்தனர்.