தெலங்கானாவைக் கலக்கும் "ஜெய் பீம்" வக்கீல் : மக்களுக்கு இலவச சட்ட உதவி
தெலங்கானாவில் வக்கீல் சுப்பாராவ் என்பவர் எஸ்சி, எஸ்டி, ஓபிசி மக்களுக்கு இலவச சட்ட சேவை செய்து வரும் சம்பவம் பொதுமக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் ஓடிடியில் வெளியான ஜெய் பீம் படம் மக்களிடையே மிகப் பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. பழங்குடியின மக்கள் படும் அவஸ்தைகளையும், சிக்கல்களையும் இந்தப் படம் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
தமிழக அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், பொதுமக்கள் என பலராலும் பாராட்டப்பட்டது. படத்தில் வரும் வக்கீல் சந்துருதான் பின்னர் நீதிபதி சந்துருவாக உயர்ந்து ஆயிரக்கணக்கான வழக்குகளுக்கு நல்ல தீர்ப்பு வழங்கி ஏழை எளியவர்களுக்கு நல்லது நடக்க காரணமாக இருந்தார்.
இந்த நிலையில் சந்துருவைப் போலவே தெலங்கானாவிலும் ஒரு வழக்கறிஞர் இலவசமாக வாதாடி ஏழை எளிய குறிப்பாக எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவு மக்களுக்கு உதவி செய்து வருகிறார்.
தெலங்கானாவின் கம்மம் மாவட்டம் வெம்சூரைப் பூர்வீகமாகக் கொண்டவர் சுப்பாராவ் மக்களுக்கு நீதித்துறை மீது நம்பிக்கை வர வேண்டும், விளிம்புநிலை மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காகவே தான் இலவசமாக வாதாடி வருவதாக கூறியுள்ளார்.
இவர் இப்படி இலவசமாக வாதாட முக்கியக் காரணமே இவரது தாத்தா தோலா முத்தையாதான். பட்டியலின வகுப்பைச் சேர்ந்த தோலா முத்தையா 1975ம் ஆண்டு ஒரு பொய் வழக்கில் கைது செய்யப்பட்டார். பின்னர் வெம்சூர் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு மர்மமான முறையில் அவர் உயிரிழந்தார்.
அவரை விசாரணையின் போது அடித்துக் கொன்று விட்டதாக சர்ச்சை எழுந்தது. ஆனால் அந்தக் காலத்தில் அதுபோன்ற சம்பவங்கள் பெரிதுபடுத்தப்படுவதில்லை என்பதால் அப்படியே அந்த சம்பவம் மறக்கடிக்கப்பட்டது.
ஆனால் சுப்பாராவ் மனதில் தனது தாத்தாவுக்கு நடந்த கொடுமை அடிமனதிலேயே தேங்கி இருந்தது. வக்கீலுக்குப் பிடித்து சாமானிய மக்களுக்கு உதவ வேண்டும் என்ற வைராக்கியம் பிறந்தது. இதன் காரணமாகவே அவர் வக்கீலுக்குப் படித்தார். படித்து முடித்த கையோடு மக்களுக்காக களம் குதித்து விட்டார்
இவர்களது சட்ட நிறுவனம், வருட வருமானம் ரூ.3 லட்சத்திற்கும் கீழ் உள்ளோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் பிற்பபடுத்தப்பட்டோர் ஆகியோருக்கு இலவசமாக சட்ட சேவையை செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.