மின்கம்பத்தில் ஏறிய எலக்ட்ரீசியன் பரிதாபமாக உயிரிழப்பு - வயரை சரிசெய்தபோது எதிர்பாரா சம்பவம்
தூத்துக்குடி அருகே மின் கம்பத்தில் ஏறி மின் வயரை சரி செய்த தனியார் எலக்ட்ரீசியன் மீது மின்சாரம் தாக்கியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள வெள்ளாளன்கோட்டை ஊராட்சியில் உள்ள சூரியமணிக்கன் கிராமத்தில் ஞான சிவசுப்பிரமணியன் என்பவருக்குச் சொந்தமான தோட்டத்தை செல்லையா என்பவர் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார்.
இதனிடையே இன்று காலையில் தோட்டத்தில் உள்ள மின் மோட்டார் ஓடவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மோட்டாரை பழுது நீக்க அந்த கிராமத்தைச் சேர்ந்த தனியார் எலக்ட்ரீசியன் செல்லத்துரை என்பவரை செல்லையா அழைத்துள்ளார்.
அங்கு வந்த செல்லத்துரை, மின்வாரிய ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்காமல் டிரான்ஸ்பார்மரை ஆப் செய்துவிட்டு மின்கம்பத்தின் மீது ஏறி மின்வயரை பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதனைத் தொடர்ந்து செல்லத்துரை மின் கம்பத்தின் வயரில் சரிந்து விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் கயத்தார் போலீசார் விரைந்து சென்று ஜேசிபி இயந்திரம் மூலமாக செல்லத்துரை உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.