ரிஷி சுனக் கடும் பின்னடைவு; தேர்தலில் வரலாறு காணாத தோல்வி? பகீர் கருத்து கணிப்பு!
நாடாளுமன்ற தேர்தலில் ரிஷி சுனக் மோசமான தோல்வியை அடைய வாய்ப்பு இருப்பதாக தெரியவந்துள்ளது.
ரிஷி சுனக்
பிரிட்டனில் தற்போது ஆளும்கட்சி தலைவராகவும் பிரதமராகவும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் இருந்து வருகிறார். இவர் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் கடந்த 2022ம் ஆண்டு பிரதமரானார்.
இந்நிலையில், இங்கிலாந்தில் நடப்பாண்டின் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முறை யாருக்கு வெற்றி வாய்ப்பு? என்பது தொடர்பாக சிவில் சமூக பிரச்சார அமைப்பான 'பெஸ்ட் ஃபார் பிரிட்டன்' மெகா கருத்துக் கணிப்பு நடைபெற்று அதன் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
அதில், எதிர்க்கட்சிகளில் ஒன்றானத் தொழிலாளர் கட்சிக்கு மக்கள் ஆதரவு அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது. அதன்படி, தொழிலாளர் கட்சி 45 சதவீத வாக்குகளைப் பெறும் எனவும், ஆளும்கட்சியாக இருக்கும் கன்சர்வேட்டிவ் கட்சி வெறும் 26 சதவீத வாக்குகளை மட்டுமே பெறும் எனவும், கூறப்படுகிறது.
கருத்து கணிப்பு
அதனால், தொழிலாளர் கட்சி கன்சர்வேட்டிவ் கட்சியை விட 19 சதவீத வாக்குகள் கூடுதலாகப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிற நிலையில், இந்த சர்வே முடிவுகள் ஆளும் கட்சிக்கு மிகவும் தலைவலியாகவே அமைந்துள்ளது.
இங்கிலாந்தில் மொத்தமாக 650 தொகுதிகள் உள்ளது. அதில் ஒரு கட்சி ஆட்சி அமைக்கவேண்டும் என்றால் 326 தொகுதிகளில் வெல்ல வேண்டும். ஆனால், இந்த சர்வேப்படி பார்த்தால் தொழிலாளர் கட்சி 468 தொகுதிகளில் வெற்றிபெறும் என்று சொல்லப்படுகிறது.
எனவே, சர்வேயின் கூற்றுப்படி ரிஷி தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சி 100க்கும் குறைவான தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்று வரலாறு காணாதத் தோல்வியை சந்திக்கும் என்று கூறப்படுகிறது.