வாக்காளர் பட்டியல் வெளியீடு.. 18 வயது நிரம்பியவர்கள் எப்போ, எப்படி அப்ளை செய்வது?
தமிழகத்தில் வாக்காளர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.
தேர்தல் அதிகாரி
தமிழக்தின் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு இன்று வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். இது குறித்து நிருபர்களிடம் பேசிய அவர், "தமிழகத்தில் இன்று ஒவ்வொரு மாவட்டத்திலும் வரைவு வாக்காளர் பட்டியலை அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். இதன் பிரதியை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளிடம் வழங்கி உள்ளோம்.
ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் வரைவு வாக்காளர் பட்டியலை வைக்க உள்ளோம். அதை பொதுமக்கள் பார்த்து தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா? முகவரி மாற்றம் வேண்டுமா? என்பதை தெரிந்து கொண்டு விண்ணப்பிக்கலாம்".
அப்ளை செய்யுங்கள்
இதனை தொடர்ந்து, அவர் கூறுகையில், "தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல்படி மொத்தம் 6 கோடியே 11 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இதில் 3 கோடி ஆண் வாக்காளர்களும் 3 கோடியே 10 லட்சம் பெண் வாக்காளர்களும் உள்ளனர். மூன்றாம் பாலினத்தவர் 8,016 பேர் உள்ளனர். வாக்காளர் பட்டியலில் 17 வயது நிரம்பிய புது வாக்காளர்களும் தங்களது பெயர்களை சேர்ப்பதற்கு விண்ணப்பிக்கலாம்.
அவர்களுக்கு 18 வயது பூர்த்தியாகும் காலாண்டில் அவர்களது பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும். இதற்காக ஜனவரி-1, ஏப்ரல்-1, ஜூலை-1, அக்டோபர்-1 ஆகிய தேதிகளில் 18 வயது ஆகும்போது வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படும். இணைய தளம் வாயிலாகவும் பெயர்களை சேர்க்கலாம். வாக்காளர் ஹெல்ப் லைன் மொபைல் ஆப் மூலமும் வாக்காளர் பட்டியலை பார்த்து விண்ணப்பிக்கலாம்.
அடுத்த மாதம் 4, 5, 18, 19 தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. அதில் பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம். பரிசீலனைக்கு பிறகு பெயர்கள் சேர்ப்பு, திருத்தம் நடைபெறும். இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 5-ம் தேதி வெளியிடப்படும்" என்று கூறியுள்ளார்.