சென்னையில் தேர்தல் அதிகாரி திடீரென்று அரசியல் கட்சிகளுடன் ஆலோசனைக்கூட்டம்!
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வந்துக் கொண்டிருக்கிறது. இன்னும் ஒரு சில வாரங்களில் தமிழகத்திற்கு அடுத்த முதல்வர் யார் என்பது தெரியவரும். தேர்தலை எதிர்நோக்கி அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன. தேர்தல் ஆணையமும் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது.
பதற்றமான வாக்குச்சாவடிகளைக் கண்டறிந்து அங்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. அதோடு, தேர்தல் நடத்தை விதிகள் முறையாக பின்பற்றப்படுகிறதா? என பறக்கும் படையினர் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். இதனையடுத்து, 80 வயதுக்கு மேற்பட்டோருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கும் தபால் வாக்கு செலுத்தும் விண்ணப்பங்கள் விநியோகம் தற்போது தொடங்கியிருக்கிறது.
சென்னையில் மட்டும் 7,300 பேர் தபால் வாக்களிக்க தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனையடுத்து, இன்று காலை தபால் வாக்குகளை வீடுகளுக்கே சென்று பெரும் பணி சென்னையில் தொடங்கியிருக்கிறது.

இந்நிலையில், தபால் வாக்கு தொடர்பாக அரசியல் கட்சிகளுடன் சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி பிரகாஷ் திடீரென்று ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். அதில் அதிமுக சார்பில் பாலகங்கா, திமுக சார்பில் சேகர்பாபு, பாஜக சார்பில் கராத்தே தியாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.