காஞ்சிபுரம் மாநகராட்சியில் வேட்பு மனு தாக்கல் - பலத்த போலீஸ் பாதுகாப்பு இன்று தொடங்கியது

election kanchipuram nomination filed
By Nandhini Jan 28, 2022 06:38 AM GMT
Report

காஞ்சிபுரம் மாநகராட்சியில் வேட்பு மனு தாக்கல் இன்று துவங்கிறது. இதனையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாநகராட்சியில் வேட்பு மனு தாக்கல் துவக்கம் பொதுமக்கள் ஆர்வத்துடன் வேட்பு மனுக்களை பெற்று வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, மாங்காடு மற்றும் குன்றத்தூர் இரண்டு நகராட்சி, ஶ்ரீபெரும்புதூர்,உத்திரமேரூர், வாலாஜாபாத் என 3 பேரூராட்சி பகுதிகளில் நகர்ப்புற தேர்தல் நடைபெறுகிறது.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் பிப்ரவரி 19ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் இன்று முதல் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்களில் வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுவை தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது.

வேட்புமனு தாக்கல் செய்யும் வகையில் தேர்தல் அலுவலர் உதவி தேர்தல் அலுவலர்கள் என பலர் நியமிக்கப்பட்டு மண்டலம் வாரியாக அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

காஞ்சிபுரம் மாநகராட்சியில் தேர்தல் அலுவலர் மற்றும் உதவி தேர்தல் அலுவலர்கள் என ஒன்பது பேர் நியமிக்கப்பட்டு தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வேட்புமனு தாக்கல் செய்யப்படும் இடங்களான மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகிய இடங்களில் காவல் துறையினர் காலை 7 மணி முதலே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

வேட்புமனு பகுதியினை காஞ்சிபுரம் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் , காவல் ஆய்வாளர்கள் என அனைவரும் ஆய்வு மேற்கொண்டனர்.

பாதுகாப்பு பணியில் காஞ்சிபுரம் மாவட்ட ஊர்க்காவல் படையினரும் இணைந்து தேர்தல் பணியில் ஈடுபடுகின்றனர். மாநகராட்சி ஊழியர்கள் அனைவரும் அடையாள அட்டை அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் வேட்பு மனு பெறுதல் மற்றும் கொடுத்தல் ஆகியவற்றிற்கு செல்லும் நபர்களை சோதனையிட்ட பின்னரே காவல்துறையினர் அனுமதிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்யும் பகுதிகளில் சிசிடிவி காட்சி மூலம் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.