மக்களின் உயிரை விட மோடிக்கு தேர்தல் தான் முக்கியம் - காங்கிரஸ் குற்றச்சாட்டு
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. இதில் மகாராஷ்டிரா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா உள்பட நாடு முழுவதும் கொரோனா அதிவேகமாக பரவி வருகிறது. இதற்கு மத்தியில் 5 மாநில சட்டசபை தேர்தலும் நடைபெறுகிறது.
இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் இரண்டாவது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் துரித நடவடிக்கை எடுத்து வருகின்றன.
இதனிடையே தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்குவங்கத்தில் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கிறது. இதில் மேற்கு வங்கத்தில் மட்டும் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மற்ற மாநிலங்களில் தேர்தல் முடிந்தாலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறவில்லை. மே 2ஆம் தேதி தான் வாக்கு எண்ணிக்கை நடக்கவிருக்கிறது.
இந்தநிலையில் மேற்கு வங்க தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் பிரதமர் மோடியை, மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் நானா படோலே கடுமையாக சாடி உள்ளார்.
”கொரோனா வைரஸ் தொற்று நாடு முழுவதும் அதிவேகமாக பரவி வருகிறது என்பதை தேசிய அளவில் வெளியிடப்பட்ட அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.
ஆனால் பிரதமர் மோடியோ தேர்தல் பிரசார கூட்டத்தில் மும்முரமாக உள்ளார்.அவருக்கு மேற்குவங்க தேர்தல் தான் பிரதான பிரச்சினை. நோய் தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் குறித்து அவருக்கு எந்த கவலையும் இல்லை.
மேற்கு வங்கத்தில் தேர்தலை முடித்த பிறகு தான் பிரதமர் நரேந்திர மோடி நாடு தழுவிய முழு ஊரடங்கு உத்தரவை பிறப்பிப்பார் எனக் கூறினார்.
குறிப்பாக கடந்த 1ஆம் தேதி முதல் 10ஆந் தேதி வரை நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு கடுமையாக உயர்ந்தது. இதேநேரத்தில் பிரதமர் மோடி முகத்தில் முக கவசம் கூட அணியாமல் பெருமளவு மக்களை கூட்டி பொதுக்கூட்டங்களை நடத்திக்கொண்டு இருக்கிறார்.
அவர் மகிழ்ச்சியுடன் பிரசாரம் செய்கிறார். இதன்மூலம் அவருக்கு மக்களின் உயிரை விட அவருக்கு தேர்தல் தான் முக்கியம் என்பது தெரிகிறது. பொதுக்கூட்டத்தில் முகக்கவசம் அணியாமல் கலந்துகொள்வதன் மூலம் அவர் மக்களுக்கு எதை உணர்த்த விரும்புகிறார் எனவும் நானா படோலே கேள்வி எழுப்பினார்”