ஒருவராலும் வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்யவே முடியாது: சத்யபிரதா சாகு
வாக்குப்பதிவு இயந்திரங்களை யாராலும் ஹேக் செய்ய முடியாது என்றும், தமிழகத்தில் மே 2ம் தேதி காலை 8.30 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்திருக்கிறார்.
தமிழகத்தில் தேர்தல் ஆணையம் சட்டமன்றத் தேர்தலுக்கான தேதியை அறிவித்தவுடன் அனைத்து கட்சிகளும் மும்முரமாக பிரச்சாரப்பணிகளை மேற்கொண்டது. கட்சித் தலைவர்கள் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பரப்புரையை நிகழ்த்தினார்கள்.
தேர்தல் நெருங்கிய போது போட்டிக்களத்தில் அனல் தெறிக்கும் பிரச்சாரம் சூடு பிடித்தது. அதிலும், அதிமுகவுக்கும், திமுகவுக்கும் கடுமையான போட்டி நிலவியது. ஒருவரையொருவர் குறைக் கூறிக்கொண்டு பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.
தமிழக மக்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த சட்டமன்ற பொதுத் தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற்று முடிந்தது. இதனையடுத்து, தமிழகத்திற்கு அடுத்த முதல்வர் யார் என்ற கருத்து கணிப்புக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
இந்நிலையில், தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது -
வாக்கு எண்ணிக்கை தொடர்பாக இன்று பிற்பகல் 3 மணிக்கு, மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்திக் கொண்டு வருகிறது. வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடுவோர் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.
வாக்கு எண்ணிக்கை மையத்தில் வேட்பாளர்களோ, ஆதரவாளர்களோ கொண்டாட்டத்தில் ஈடுபடக் கூடாது. வாக்குப்பதிவு இயந்திரங்களை யாராலும் ஹேக் செய்யவே முடியாது. அதற்கான வாய்ப்புகள் கிடையாது.
வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒரு கால்குலேட்டர் போலதான். மே 2ம் தேதி காலை 8.30 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும். வாக்கு எண்ணும் மையங்கள் அருகே எந்த வாகனம் வந்தாலும் அவை சோதனை நடத்தப்படும் என்றார்.