இன்று மாலை 6 மணிக்கு மேல்... தேர்தல் ஆணையம் கடும் கட்டுப்பாடு
சட்டப்பேரவை தேர்தலுக்கு நாளை ஒருநாள் மட்டுமே உள்ள நிலையில் இன்று மாலை 6 மணிக்கு மேல் தேர்தல் பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் நடத்தவோ அதில் பங்கேற்கவோ கூடாது என தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு விதித்துள்ளது.
தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கும் நாளை மறுநாள் ஏப்ரல் 23ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது.
காலை 7 மணிமுதல் மாலை 6 மணிவரை தேர்தல் நடைபெறும், எனவே இன்று மாலை 6 மணிவரை பிரசாரம் செய்ய அனுமதியுண்டு.
பரப்புரையின் கடைசி நாளான இன்று முதலமைச்சர் ஸ்டாலின் கொளத்தூரிலும், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும் பரப்புரை செய்கின்றனர்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காரைக்குடியிலும், தவெக தலைவர் விஜய் சென்னையிலும், காங்கிரஸ் தேசியத் தலைவர் கார்கே திருவான்மியூரில் பரப்புரை மேற்கொள்ளவுள்ளார்.
இந்நிலையில் தேர்தல் பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் நடத்தவோ, அதில் பங்கேற்கவோ கூடாது எனத் தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு விதித்துள்ளது.
அதேபோல, திரைப்படம், தொலைக்காட்சி, வானொலி மற்றும் வாட்ஸ்அப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தேர்தல் தொடர்பான செய்திகளைப் பதிவிடக் கூடாது எனவும், குறுஞ்செய்தி, இணையம் உள்பட அனைத்து மின்னணு ஊடகங்களிலும் தேர்தல் தொடர்பான பதிவுகள் கூடாது என்றும் தெரிவித்துள்ளது.
இசை நிகழ்ச்சி, திரையரங்க செயல்பாடு, பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் எந்த விதத்திலும் பரப்புரை செய்யக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பரப்புரைக்கான கட்டுப்பாட்டை மீறினால் 2 ஆண்டுகள் சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும் எனத் தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.
