மோடிக்கு நோட்டீஸ் அனுப்புமா தேர்தல் ஆணையம்? மமதா பானர்ஜி ஆவேசம்
சட்டமன்ற தேர்தல் நடைபெறும் ஐந்து மாநிலங்களில் மேற்கு வங்கம் தவிர மற்ற நான்கு மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்துவிட்டது. மேற்கு வங்கத்தில் இன்னும் ஐந்து கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளன. இந்நிலையில் அங்கு திரிணாமுல் காங்கிரசும், பாஜகவும் தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
தமிழகத்தை விடவும் இந்தத் தேர்தலில் மேற்கு வங்கத்தில் தான் பாஜக அதிக கவனம் செலுத்தி வருகிறது. இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்தின்போது மதத்தை வைத்து வாக்கு சேகரித்தார் எனவும் துணை இராணுவப் படையினரை மிரட்டினார் என மமதா பானர்ஜி மீது பாஜக அளித்த புகாரில் பதிலளிக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதற்கு பதிலளித்து பேசியுள்ளார் மமதா பானர்ஜி. ஹவுராவில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய அவர், “எனக்கு எவ்வளவு நோட்டீஸ் அனுப்பினாலும் என்னுடைய பதில் ஒன்றாக தான் இருக்கும். ஆனால் ஒவ்வொரு நாளும் இந்து - முஸ்லிம் பிரச்சனையைத் தூண்டிவிட்டு வகுப்புவாதத்தில் ஈடுபடும் பிரதமர் மோடிக்கு எதிராக எத்தனை நோட்டீஸ் அனுப்பியுள்ளீர்கள்.
நந்திகிராமில் உள்ள இஸ்லாமியர்களை பாகிஸ்தானியர்கள் என அழைத்தவர்களுக்கு தேர்தல் ஆணையன் ஏன் நோட்டீஸ் அனுப்பவில்லை” என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
தேர்தல் ஆணையம் பாஜகவுக்கு ஆதரவாக ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக திரிணாமுல் காங்கிரஸ் ஏற்கனவே குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.