வாக்களிக்க பத்திரிக்கை வைத்த தேர்தல் ஆணையம்
பொதுமக்களிடையே வாக்குப்பதிவை அதிகரிக்கவும் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாகவும் ஸ்ரீரங்கம் தேர்தல் அதிகாரி திருமண அழைப்பிதழ் போல் துண்டுப் பிரசுரங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ்நாட்டில் இன்னும் சில வாரங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது.
ஒருபுறம் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் அனைத்துக் கட்சிகள் தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டன. அதே சமயம் தேர்தலில் 100% வாக்கப்பதிவு பதிவாக வேண்டும் என்பதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகளையும் தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது.
அந்த வகையில் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதியின் தேர்தல் நடத்தும் அதிகாரியான நிஷாந்த் திருமண அழைப்பிதழ் வடிவில் துண்டுப் பிரசுரங்களை அச்சிட்டு, அதை மக்களிடையே விநியோகத்து நூதன முறையில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
அதில் வாக்களிக்க அழைப்பிதழ் என தலைப்பிட்டு மணமக்கள் பெயர் இருக்கவேண்டிய இடத்தில் இந்திய தேர்தல் ஆணையம் நடத்தும் வாக்களிக்கும் வைபோகம் என்ற வாசகம் இடம் பெற்றுள்ளன.

இந்த நிகழ்ச்சி வரும் 6-4-2021 காலை 7 மணி முதல் மாலை 5 மணிக்குள் தங்கள் அருகாமையில் உள்ள வாக்குச்சாவடியில் நடைபெற உள்ளதால் வாக்காளர்கள் தங்களது குடும்ப உறுப்பினர்களோடு வருகை தந்து தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்து சுற்றமும் நட்பும் சூழ வருகை தந்து தவறாமல் தங்களது வாக்கினைச் செலுத்தும் படி அழைக்கிறோம் எனக் கூறப்பட்டு உள்ளது.