தேர்தல் பிரச்சாரத்தில் நிறைமாத பெண் வேட்பாளருக்கு குழந்தை பிறந்தது - நெகிழ்ச்சி சம்பவம்
பிரச்சாரத்தின் போது நிறைமாத பெண் வேட்பாளருக்கு குழந்தை பிறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்தையடுத்த, கடையநல்லூர் நகராட்சிக்கு உட்பட்ட 1வது வார்டில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ரேவதி பாலீஸ்வரன். இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.
வேட்புமனு தாக்கல் செய்ததிலிருந்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். தன்னால், நடக்க முடியாவிட்டாலும், நிறைமாத கர்ப்பிணியான ரேவதியோ வீடு வீடாக வாக்காளர்களை சந்தித்து வாக்கு சேகரித்து வந்தார்.
இந்நிலையில், கடந்த 16ம் தேதி குமந்தபுரம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. அப்போது, அவரை உடன் இருந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மருத்துவமனைக்கு கொண்டு சென்ற சில மணி நேரத்தில் அவருக்கு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது. தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளனர். பிரச்சாரத்தில் பெண் வேட்பாளருக்கு நல்லவிதமாக பெண் குழந்தை பிறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.