மின்சார வாரியத்தில் 1026 கோடி ரூபாய்க்கு ஊழல் நடைபெற்றுள்ளது - என்.ஆர். இளங்கோ குற்றச்சாட்டு
மின்சார வாரியத்தில் 1026 கோடி ரூபாய்க்கு ஊழல் நடைபெற்றுள்ளது என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி மற்றும் மாநிலங்களை உறுப்பினர் என்.ஆர். இளங்கோ குற்றம் சாட்டினார்கள். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி மற்றும் மாநிலங்களை உறுப்பினர் என்.ஆர். இளங்கோ ஆகியோர் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.
அப்போது அவர்கள் பேசியதாவது, “தேர்தல் கருத்துக்கணிப்புகளில் திமுக பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்கும் என்று பல்வேறு முடிவுகள் வெளிவந்துள்ள நிலையில் அதிமுக அமைச்சர்கள் மீது புகார்கள் ஆதாரத்துடன் தினமும் அறிவாலயத்திற்கு வருகின்றன. மின்சார வாரியத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளன.
அதில் ஒன்று விசாகப்பட்டினம் துறைமுகத்தில் நிலக்கரி இறக்குமதி பணிகளில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பணிக்காக நியமிக்கப்பட்ட பணியாளர்களுக்கு கான்ட்ராக்டர் 236.57 கோடி ரூபாய் துறைமுக ஊழியர்களுக்கு கொடுத்துள்ளார். கான்ட்ராக்டருக்கு 1267.49 கோடி ரூபாய் தமிழக அரசு வழங்கியுள்ளது.
உரிய ஆவணங்கள் இல்லாம் தமிழக அரசு 1026.கோடி ரூபாய் அதிகமாக வழங்கியுள்ளது. இந்த கூடுதல் தொகைக்கு காரணமாக பணியாளர்களுக்கு தினக்கூலியாக 12,058 ரூபாய் வழங்கப்பட்டதாக அந்த நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
இந்த முறைகேடுகள் மத்திய அரசின் 2011-2016 ஆண்டுகளின் கணக்கு தணிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது. ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளாக மாநில அரசு மற்றும் மத்திய அரசுகள் முறைகேடுகள் குறித்து உரிய விசாரணை நடத்தாமல் இருக்கின்றன” என்றனர்.