அதிமுக ஆட்சியில் தடுப்பூசிகள் 8% வீணாக்கப்பட்டுள்ளது: அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவலால் அதிர்ச்சி
மத்திய அரசிடம் பெற்றதை விட கூடுதல் தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாகவும், தினந்தோறும் வரும் தடுப்பூசிகள் மாவட்ட வாரியாக பிரித்து அனுப்பப்பட்டு வருகிறது என தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "மதுரையில் அமைச்சர் தொகுதிகளில் மட்டும் தடுப்பூசி முகாம்கள் நடைபெறுவதாக குற்றச்சாட்டு கூறும் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, தினந்தோறும் அவரது தொகுதியில் நடைபெறும் தடுப்பூசி முகாம்களை ஆய்வு செய்து விட்டு, ஊடகங்களில் பேசுவது நல்லது", என பதிலடி கொடுத்தார்.
கடந்த அதிமுக ஆட்சியில் ஜனவரி 16 ஆம் தேதி முதல் மே 7 ஆம் தேதி வரை 8 சதவீத தடுப்பூசிகள் விரயம் செய்யப்பட்டது என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தெரிய வந்துள்ளது.
அதன்பின் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, இதுவரை மத்திய அரசிடம் இருந்து வரப்பெற்ற 1 கோடியே 58 லட்சம் தடுப்பூசிகளை விடக் கூடுதலாக ஒரு லட்சம் தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு உள்ளது என்றும் மா.சுப்பிரமணியன் கூறினார்.
இந்த சந்திப்பின் போது அமைச்சர்கள் பி.மூர்த்தி, ராஜ கண்ணப்பன் மற்றும் பெரியகருப்பன் ஆகியோர் உடன் இருந்தனர்.