செல்போனை விழுங்கி வயிற்றுக்குள் மறைத்து வைத்த கைதி - 6 மாதம் கழித்து அறுவை சிகிச்சையில் அகற்றம்!
எகிப்து நாட்டில் வயிற்றுவலியால் அவதிப்பட்ட கைதிக்கு அறுவை சிகிச்சை செய்த டாக்டர்கள் வயிற்றினுள் செல்போன் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். தெற்கு எகிப்தில் உள்ள சிறையில் கைதி ஒருவருக்கு கடுமையான வயிற்று வலி இருந்ததால் அஸ்வான் யூனிவர்சிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு எக்ஸ்-ரே, சிடி ஸ்கேன் என பல்வேறு பரிசோதனைகள் நடத்திய பிறகு அவர் வயிற்றுக்குள் வித்யாசமாக ஏதோ ஒரு பொருள் இருப்பது கண்டறிப்பட்டுள்ளது. உடனே அறுவை சிகிச்சைக்கு தயார் செய்த மருத்துவர்கள் உள்ளே ஒரு செல்போன் இருப்பதை கண்டறிந்துள்ளனர்.
அந்த கைதி ஆறு மாதங்களுக்கு முன்பு செல்போனை விழுங்கியுள்ளார். இதனால் அந்த கைதியின் உடலில் உணவு செரிமானம் செய்வதை செல்போன் தடுத்துள்ளது. மேலும் அவரின் வயிறு மற்றும் குடல் வீக்கம் அடைந்துள்ளது. இரண்டு மணி நேர நீண்ட சிகிச்சைக்கு பிறகு போனை வயிற்றிலிருந்து அகற்றி, கைதியின் உயிரை மருத்துவர்கள் காப்பற்றியுள்ளனர்.
மருத்துவர்கள் ஏன் செல்போனை விழுங்கினார் என்று தெரியாததால் வினோத வழக்கு என பெயரிட்டு இந்த அறுவை சிகிச்சையை நடத்தி முடித்திருக்கின்றனர்.
சிகிச்சை முடிந்த பிறகு அந்த கைதியிடம் எப்போது வேண்டுமானாலும் உயிருக்கு ஆபத்து வரலாம், ஏனென்றால் செல்போன் பேட்டரிகளில் உள்ள பல கெமிக்கல்கள் உடலுக்கு தீங்கு விளைவிப்பதாகும். அதனால் கவனத்துடன் இருக்க வேண்டும் என்று எச்சரித்தனர். சிகிச்சைக்கு பிறகு கைதி சீரான உடல்நலத்துடன் உள்ளார் என்று மருத்துவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.