ஜல்லிக்கட்டிற்கு யுனெஸ்கோ அங்கீகாரம் பெறும் முயற்சி – பாரிசில் தொடரும் நடவடிக்கைகள்
தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு — உலக பாரம்பரிய மற்றும் கலாசார விழாக்களாக அங்கீகரிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்!
இதை வலியுறுத்தும் வகையில், தமிழ்நாட்டில் இயங்கி வரும் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நல சங்கத்தின் கௌரவ தலைவர் திரு. செந்தில் தொண்டமான் அவர்கள், பாரிசில் உள்ள யுனெஸ்கோ தலைமையகத்திற்கே சென்று பல முக்கியமான முயற்சிகளைத் தற்போது மேற்கொண்டு வருகிறார்.
இந்த பயணத்தின் முக்கிய நோக்கம், யுனெஸ்கோவின் அகவாழ்வியல் மற்றும் காணொளி மரபுகள் பட்டியலில் ஜல்லிக்கட்டு விளையாட்டை சேர்க்கும் வகையில் அங்கீகாரம் பெறுவதாகும்! முதன்மையான இந்த நோக்கத்தை வெற்றிகரமாக நிறைவேற்றும் பொருட்டு திரு. செந்தில் தொண்டமான், யுனெஸ்கோவின் ஆசியா-பசிபிக் பிராந்திய இயக்குனராக செயல்படும் மாண்புமிகு ஹிமால்சுலி குரங் அவர்களை நேரில் சந்தித்துள்ளார்.
அந்தச் சந்திப்பில், ஜல்லிக்கட்டின் பாரம்பரியத்தையும், அதன் சமூக-பண்பாட்டு மதிப்புக்களையும் விளக்கும் முக்கிய ஆவணங்கள் மற்றும் தரவுகளை சமர்ப்பித்துள்ளார். யுனெஸ்கோவின் அதிகாரிகள் அவற்றைப் பெற்றுக் கொண்டு, பரம்பரியமிக்க ஜல்லிக்கட்டை யுனெஸ்கோவின் கவனத்திற்கு கொண்டு வந்ததற்காக திரு.செந்தில் தொண்டமான் அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.
இந்த சந்திப்பின் போது, ஜல்லிக்கட்டின் முக்கியத்துவம், அதில் கிராமப்புற வாழ்வியல் மற்றும் இளம் தலைமுறையின் ஈடுபாடு உள்ளிட்ட அனைத்து விடயங்களும் தெளிவாக விவரிக்கப்பட்டன. ஜல்லிக்கட்டு தமிழர்களின் அடையாளம் மட்டுமல்ல; அது சமுதாய ஒற்றுமையைப் பிரதிபலிக்கும் சிறப்புமிக்க வீர விளையாட்டு என்பதைத் திரு. செந்தில் தொண்டமான் வலியுறுத்தியுள்ளார்.
அவருடைய இந்த முயற்சி, தமிழர் கலாச்சார வீர மரபை உலக அரங்கில் பதிவு செய்யும் ஒரு மிக முக்கியமான முயற்சியாக ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் மற்றும் உலகத் தமிழர்கள் மத்தியில் மதிப்பிடப்பட்டுள்ளது. தனது இந்த முயற்சியால், "தமிழர்களின் வாழ்க்கை முறையோடு இணைந்துள்ள ஜல்லிக்கட்டின் பெருமிதம், உலக பாரம்பரியத்தின் ஒரு பகுதி என அடையாளம் காணப்படும் நாள் விரைவில் வரும்" என்ற நம்பிக்கை பிறந்துள்ளது என செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.