கச்சத்தீவை மீட்க வேண்டாம்: முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஈழத் தமிழர்கள் வேண்டுகோள்
இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை மீட்கவேண்டும் என்ற கோரிக்கையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கைவிட வேண்டும் என்று இலங்கையில் ஈழத் தமிழர்களின் தாயகப் பகுதியான வடக்கு மாகாண அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் வலியுறுத்தி உள்ளார்.
இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியை பயன்படுத்தி கச்சத்தீவை மீட்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில் இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை மீட்கும் கோரிக்கையை முதலமைச்சர் மு க ஸ்டாலின் கைவிட வேண்டும் என சீ.வி.கே. சிவஞானம் தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நாங்கள் உலகத் தமிழர்களின் தலைவனாக பார்ப்பதாகவும், கச்சத்தீவு மீட்பு குறித்து அவர் தொடர்ந்து கூறி வருவதாகவும் குறிப்பிட்டார். மு.க.ஸ்டாலினுக்கு ஈழத்தமிழரும், இந்தியத் தமிழரும் ஒன்றுதான் என்றும், ஈழத் தமிழர்களுக்கு தமிழக மாணவர்களால் மட்டுமே பிரச்சனை இல்லை. தென்னிலங்கை சிங்கள மீனவர்களாலும் பிரச்சனை இருக்கிறது என்றார்.
மட்டக்களப்பு முதல் முல்லைத்தீவு வரை சிங்கள மீனவர்கள் ஈழத்தமிழர் கடல் வளத்தை சுரண்டி செல்வதாக குறிப்பிட்ட அவர், இதனால் ஈழத்தமிழ் மீனவர்கள் பாதிக்கப்படுவதாக கூறினார்.
ஈழத் தமிழர்கள் சுதந்திரமாக மீன் பிடிப்பது என்பது நெடுந்தீவு முதல் கச்சத்தீவு வரையில்தான் என்பதால், கச்சதீவை இந்தியா திரும்பப் பெறுவது என்பது ஈழத்தமிழர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கக்கூடும் என்றார்.
இதனால் எங்களது கோரிக்கையை முதல்வர் ஸ்டாலின் கரிசனத்துடன் அணுக வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இரு நாட்டுத் தமிழர்களையும் தங்களது மக்களாக முதல்வர் ஸ்டாலின் பார்க்க வேண்டும் எனவும் கச்சத்தீவை திரும்பப் பெறாமல் இருதரப்பும் மீனவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சீ.வி.கே. சிவஞானம் தெரிவித்தார்