கேரளாவில் படித்தவர்கள் அதிகம், அதான் தாமரை மலரவில்லை: பாஜக எம்எல்ஏ
தேசிய கட்சியான காங்கிரஸ் தென்னிந்தியாவில் ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்தது. ஆனால் தற்போது காங்கிரசிற்கு சாதகமான நிலை இல்லை என்றே கூறலாம். இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி பாஜக தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்தலாம் என திட்டமிடும் நிலையில் தமிழ் நாட்டில் வரும் ஆனா வராது என்றால், கேரளாவில் வாய்ப்பே கிடையாது ராஜா என சொல்லும் வகையில் உள்ளது.
கடந்த முறை கேரளாவில் ஒரேயொரு பாஜக எம்எல்ஏ தான் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் அதுவும் காங்கிரஸின் துணை கொண்டு தான் எம்எல்ஏவானார் என கூறப்பட்டது. தற்போது கேரளாவில் நடைபெற உள்ள தேர்தலில் ஒரு எம்எல்ஏவை கூட பாஜக பெறாது என்றே கருத்துக்கணிப்புகள் சொல்லும் நிலையில், தாமரை ஏன் கேரளாவில் மலர மறுக்கிறது என பாஜக எம்எல்ஏவான ஓ.ராஜகோபாலிடம் கேள்வி கேட்கப்பட்டது.

அந்தக் கேள்விக்கு அவர் அளித்த பதில்தான் தற்போது இணையத்தில் பேசு பொருளாகியுள்ளது அவர் கூறிய பதில் இதுதான் மற்ற மாநிலங்களைப் போல அல்லாமல் கேரளா கொஞ்சம் வித்தியாசமானது. இங்கு 90 சதவிகிதத்தினர் படிப்பறிவு பெற்றுள்ளனர். அவர்கள் சிந்திக்கிறார்கள். சிந்தித்ததை மற்றவர்களுக்கும் கடத்துகிறார்கள்.
அவர்களுக்கும் பயிற்றுவிக்கிறார்கள். அது தான் பாஜகவுக்குப் பெரும் பிரச்சினையாக இருக்கிறது. என கூறிய அவர். இரண்டாவது காரணமாக இங்கிருப்பவர்களில் 50 சதவிகித்ததினர் மட்டுமே இந்துக்கள். மீதம் உள்ளவர்கள் 45 சதவிகிதத்தினர் சிறுபான்மையினர். இது இரண்டாவது பெரிய காரணம். இந்துக்களும் சிறுபான்மையினருக்கு ஆதரவாகவே இருக்கின்றனர்.
இதனால் தான் தாமரையை மலர வைக்க முடியவில்லை.
இருப்பினும் நாங்கள் தொடர்ந்து முயற்சி செய்வோம். மெதுவாகவும் அதேசமயம் பலமாகவும் வளர்வோம் என கூறியுள்ளார்.