மெரினா கடற்கரையில் 'நம்ம சென்னை' செல்ஃபி மையம்: விரைவில் முதல்வர் எடப்பாடி திறந்து வைக்கிறார்

eddapadi-merina-beach-tamilnadu
By Jon Dec 31, 2020 07:09 PM GMT
Report

மாநகராட்சி சார்பில் இளைஞர்களை கவரும் வகையில் மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டு வரும் 'நம்ம சென்னை' செல்ஃபி மையம் விரைவில் திறக்கப்பட இருக்கிறது. சென்னையில் உள்ளூர் மக்களும், சுற்றுலாப் பயணிகளும் அதிக அளவில் வந்து செல்லும் சுற்றுலா தளமாக மெரினா கடற்கரை இருக்கிறது.

இந்த கடற்கரை அதிக அளவில் இளம் தலைமுறையினரை கவர்ந்து வருகிறது. இன்றைய இளைய தலைமுறையினர், ஸ்மார்ட் கைபேசிகளை பயன்படுத்துவதிலும், அதில் செல்ஃபி எடுப்பதிலும் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். இவர்களின் ஆர்வத்தை பூர்த்தி செய்யும் வகையில், சென்னை மாநகராட்சி சார்பில், சென்னையின் அடையாளமாக, இளைஞர்களை கவரும் விதமாக ஓர் இடத்தை உருவாக்க திட்டமிடப்பட்டது.

அதன் அடிப்படையில் ரூ.20 லட்சம் செலவில் மெரினா கடற்கரையில், ராணி மேரி கல்லூரிக்கு எதிரில் 'நம்ம சென்னை' செல்ஃபி மையத்தை அமைக்கும் பணிகள் கடந்த இரு மாதங்களாக நடைபெற்று வந்தது. தற்போது அப்பணிகள் இறுதிகட்டத்தை எட்டி இருக்கின்றன.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், இந்த செல்ஃபி மையம் நிச்சயம் இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெறும். இந்த இடம் சென்னையின் அடையாளமாகவும் மாற வாய்ப்பு இருக்கிறது.

அனைத்து பணிகளும் விரைவில் நிறைவடைய உள்ளன. இந்த செல்ஃபி மையத்தை பொங்கல் திருவிழாவின்போது, முதல்வர் திறந்து வைக்க திட்டமிடப்பட்டிருக்கிறது என்றார். ஏற்கெனவே கோவை மற்றும் ஆவடி மாநகராட்சி பகுதிகளில், 'ஐ லவ் கோவை', 'ஐ லவ் ஆவடி' என செல்ஃபி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அதனைத் தொடர்ந்து தற்போது சென்னையில் இந்த செல்ஃபி மையம் விரைவில் திறக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.