தமிழகத்திற்கு நீட் வேண்டாம் என்ற முடிவில் அதிமுக உறுதியாக உள்ளது - எடப்பாடி பழனிசுவாமி

eps assembly tn mk stalin appavu neet issue
By Swetha Subash Feb 08, 2022 08:44 AM GMT
Swetha Subash

Swetha Subash

in அரசியல்
Report

தமிழக சட்டசபை சிறப்புக்கூட்டம் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு கோரும் மசோதாவை மீண்டும் நிறைவேற்றுவதற்காக தமிழக சட்டசபையின் சிறப்பு கூட்டம் கூடியது.

நீட் விலக்கு மசோதா கடந்த செப்டம்பர் 13-ம் தேதி தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

ஓய்வு பெற்ற நீதிபதி ராஜன் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் சட்ட மசோதா தயாரிக்கப்பட்டு, அது குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறுவதற்காக ,தமிழக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஆனால் தமிழக சட்டமன்றம் நீட் விலக்கு மசோதாவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கிட்டத்தட்ட 142 நாட்கள் கழித்து ஆளுநர் மசோதாவை திருப்பி அனுப்பினார்.

இது விவகாரம் குறித்து சட்டமன்றத்தில் விவாதிக்கப்பட்டது.

அந்த வகையில் இது குறித்து பேசிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,

நீட் தேர்வு என்பது பலி பீடம் எனவும், சில மாணவர்களை கல்லறைக்கும், சில மாணவர்களை சிறைச்சாலைக்கும் அனுப்பிய நீட் தேர்வு தேவையா? என கேள்வி எழுப்பினார்.

மேலும், நீட் விலக்கு சட்ட முன்வடிவு குரல் வாக்கெடுப்பு மூலம் மீண்டும் ஒருமனதாக நீட் விலக்கு மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் சட்டசபை சிறப்பு கூட்டம் முடிந்து வெளியே வந்த அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசுவாமி,

தமிழகத்தில் நீட் தேர்வை திமுகவும் காங்கிரஸும் தான் கொண்டுவந்தது. தமிழகத்திற்கு நீட் வேண்டாம் என்ற முடிவில் அதிமுக உறுதியாக உள்ளது என தெரிவித்தார்.