கூட்டணி அழைப்பு மற்ற கட்சிகளுக்குதான்; பாஜகவுக்கு இல்லை - எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்
பாஜகவுடன் கூட்டணி இல்லை என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "டிஜிட்டல் பயிர் சர்வே பணிக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்து உள்ளது. ஆனால் தமிழக அரசு வேளாண் கல்லூரி மாணவ, மாணவியரை வைத்து இந்த பணியை செய்கிறார்கள். இது மிகவும் கண்டிக்கத்தக்கது.
பாஜக கூட்டணி
அரசு மருத்துவரை கத்தியால் குத்திய சம்பவத்தை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. மருத்துவர்கள் ஓய்வின்றி உழைப்பவர்கள். அவர்களுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் செல்வாக்குள்ள ஒரே கட்சி அதிமுகதான். 2019 பாராளுமன்ற தேர்தலில் பெற்ற வாக்குகளை விட கூடுதல் வாக்குகளை கடந்த தேர்தலில் பெற்றுள்ளோம்.
கூட்டணிக்கு வேண்டுகோள் விடுப்பது எல்லாம் மற்ற கட்சிகளுக்குத்தான் அது பாஜகவுக்குப் பொருந்தாது. அதிமுகவை பொறுத்தவரை வருகிற 2026 சட்டப்பேரவை தேர்தலில், பாஜகவுடன் கூட்டணி இல்லை என்ற முடிவை ஏற்கெனவே எடுத்துவிட்டோம், அதில் மாற்றுக் கருத்து இல்லை. எங்களைப் பொறுத்தவரை மக்கள் விரோத திமுக அரசு அகற்றப்பட வேண்டும்" என பேசியுள்ளார்.