தவெக அரசு உயிர்களுக்கு விலை வைக்கிறது - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
'திராவிட மாடல்' திமுக ஆட்சியைப் போலவே தவெக அரசும் விலைமதிப்பற்ற உயிர்களுக்கு விலை வைக்கிறது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக ஆட்சியில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் லாக்அப் மரணங்கள், சிறை மரணங்கள் மற்றும் என்கவுண்டர் சம்பவங்களைப் போலவே தற்போதைய தவெக ஆட்சியிலும் அதே நிலை தொடர்வதாக குற்றம்சாட்டியுள்ளார்.

அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
நாகர்கோவில் சிறையில் மாற்றுத் திறனாளி கைதி மற்றும் சென்னை புழல் சிறையில் விசாரணைக் கைதி ஆகியோர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவங்களில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய நீதி வழங்காமல், நிவாரணம் வழங்கி சமரசம் செய்ய அரசு முயற்சிப்பதாக அவர் விமர்சித்துள்ளார்.
விலைமதிப்பற்ற மனித உயிர்களுக்கு பணத்தின் மூலம் மதிப்பு நிர்ணயிக்க முடியாது என்றும், லாக்அப் மரணங்கள், சிறை மரணங்கள் மற்றும் தேவையற்ற என்கவுண்டர்களைத் தடுக்க அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
மேலும், மாற்றத்தை எதிர்பார்த்து வாக்களித்த மக்களுக்கு ஏமாற்றம் அளிக்காத வகையில் தவெக அரசு செயல்பட வேண்டும் என்றும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.