திமுகவிற்கு நீட் மரணங்கள் உறுத்தவில்லையா? கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி

M K Stalin Chennai Edappadi K. Palaniswami
By Sivaraj Mar 29, 2025 10:53 AM GMT
Report

சென்னையில் நீட் தேர்வு பயத்தால் உயிரை மாய்த்துக் கொண்ட தர்ஷினியை குறிப்பிட்டு, ஆளும் திமுக அரசை எடப்பாடி பழனிசாமி கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சென்னையைச் சேர்ந்த தேவதர்ஷினி என்ற 21 வயது மாணவி, நீட் தேர்வு அச்சத்தினால் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள மாணவியின் இறப்பு குறித்து, கிளாம்பாக்கம் பொலிஸார் மாணவியின் இறப்புக்கு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

neet suicide student devadarshini

இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மாணவி மரணம் குறித்து பதிவிட்டுள்ள அறிக்கையில் திமுக அரசை கண்டித்துள்ளார்.

அவர் தனது பதிவில், நீட் தேர்வு அச்சத்தால் சென்னையில் தர்ஷினி என்ற மாணவி, தன் இன்னுயிரை மாய்த்துக்கொண்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. நீட் என்ற தேர்வை நாட்டிற்கே அறிமுகப்படுத்தி, கூட்டணி கட்சியுடன் சேர்ந்து அதனை உச்சநீதிமன்றம் வரை சென்று வாதாடி, தமிழ்நாடு மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைத்திட அடித்தளம் இட்டதோடு அல்லாமல், "ஆட்சிக்கு வந்தால் நீட் என்ற தேர்வே தமிழ்நாட்டில் இருக்காது" என்று பச்சைப் பொய் சொல்லி ஏமாற்றிய திமுக-விற்கு தொடரும் நீட் மரணங்கள் மனசாட்சியை உறுத்தவில்லையா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்துடன் 2021ஆம் ஆண்டு முதல் நீட் தேர்வினால் உயிரை இழந்த மாணவர்களின் பெயர்களை பட்டியலிட்டுள்ளார்.

மேலும் அவர் தனது பதிவில், "இந்த 19 மாணவச் செல்வங்களின் உயிர்களுக்கும் திரு.மு.க.ஸ்டாலின் சொல்லப்போகும் பதில் என்ன? உதயநிதியின் நீட் ஒழிப்பு ரகசியம் வெளிவர இன்னும் எத்தனை உயிர்கள் போக வேண்டும்? தேர்தல் ஆதாயத்திற்காக சொன்ன பெரும் பொய்யால் உங்கள் கைகளில் சேர்ந்துகொண்டே இருக்கும் இரத்தக் கறைகளை எப்படி துடைக்கப் போகிறீர்கள்?

மாணவி தர்ஷினி மரணத்திற்கு ஸ்டாலின் மொடல் திமுக அரசே முழு பொறுப்பு! எனவே, நீட் தேர்வு நாடகத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வையுங்கள்! மாணவர்களை ஏமாற்றாதீர்கள் திரு.மு.க.ஸ்டாலின்!

மாணவச் செல்வங்களே-எதற்காகவும் உங்கள் இன்னுயிரை இழக்கத் துணியாதீர்கள். வாழ்க்கை பெரிது; உலகம் பெரிது! வாழ்ந்து சாதிக்க வேண்டுமே தவிர, செத்து வீழக் கூடாது. "நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம்" என்ற நம்பிக்கையோடு எப்போதும் முன் செல்லுங்கள். வெற்றி நிச்சயம் உங்களை வந்து கெஞ்சும்!" என கூறியுள்ளார்.      

Edappadi K Palaniswami