தர்மத்துக்கும், அதர்மத்துக்கும் இடையேயான தேர்தல் இது! எடப்பாடி பழனிசாமி
அதிமுக ஆட்சியில் ஏழை எளிய மக்களுக்கான சமூக நலத்திட்டங்கள் அதிக அளவில் செயல்படுத்தப்பட்டிருப்பதாக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் ஏற்காடு சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட வாழப்பாடியில் அதிமுக வேட்பாளர் திருமதி சித்ராவிற்கு ஆதரவு கோரி நடைபெற்ற பிரச்சாரத்தில் திறந்த வேனில் நின்றபடி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொதுமக்களிடையே வாக்கு சேகரித்தார்.
அங்போது பேசிய அவர், தற்போதைய சட்டப்பேரவைத் தேர்தல் தர்மத்திற்கு அதர்மத்திற்கும் இடையிலான தேர்தல். தர்மம் வெல்ல அதிமுக விற்கு வாக்களிக்க வேண்டும். எம்ஜிஆர் தோற்றுவித்த அதிமுக இயக்கத்தினால் ஏழை எளிய மக்கள் பெரிய அளவில் பயன்படுத்தினர். MGR கண்ட கனவை ஜெயலலிதா நிறைவேற்றினார். அந்த இரு பெரும் தலைவர்கள் வழியில் ஏழை எளிய மக்களின் வாழ்க்கை ஏற்றம் பெற பல்வேறு திட்டங்களை அதிமுக அரசு தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது.
ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வேண்டுமென்றே திட்டமிட்டு அரசின் மீது தேவையற்ற அதோடு குற்றச்சாட்டுகளை தொடர்ந்து தெரிவித்து வருகிறார். இந்த குற்றச்சாட்டுகளுக்கு பொது மேடையில் நின்று நான் பதில் அளிக்க தயார் என பலமுறை தெரிவித்தும் அவர் என்னோடு விவாதிக்க தயங்குகிறார்.
நான் எழுப்பும் கேள்விகளுக்கு அவர் பதில் சொல்வதில்லை, மக்களிடையே அதிமுக அரசுக்கு கிடைத்து வரும் ஆதரவை பொறுத்துக் கொள்ள முடியாமல் பொய் குற்றச்சாட்டுகளை பரப்பி வருகிறார், தர்மம் நிச்சயம் வெல்லும். தேர்தலின்போது அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் அதிமுக அரசு நிறைவேற்றி உள்ளது. ஆனால் இரண்டு ஏக்கர் நிலம் தருவோம் என கூறி 2006 இல் ஆட்சிக்கு வந்த திமுக அதனை முழுமையாக நிறைவேற்றவில்லை.
அதிமுக ஆட்சியில் மாநிலம் முழுவதும் 52 லட்சத்து 31 ஆயிரம் மாணவர்களுக்கு அரசின் சார்பில் மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது. இதுதான் அதிமுகவிற்கும் திமுகவிற்கும் உள்ள வித்தியாசம் தேர்தல் வரும்போது மட்டும் கவர்ச்சிகரமான திட்டத்தை அறிவித்து மக்களை ஏமாற்றி வாக்கு சேகரிக்க திமுகவினர் முயற்சிக்கின்றனர். ஆனால் அதிமுக ஆட்சியில் ஏழை எளிய மக்கள் பயனடையும் வகையில் சமூக நலத் திட்டங்கள் தொடர்ச்சியாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
நான் முதலமைச்சராக பொறுப்பேற்கும் போது பத்து நாட்களில் ஆட்சி போய்விடும். ஒரு மாதத்தில் ஆட்சி போய்விடும் என ஸ்டாலின் விமர்சனம் செய்தார், ஆனால் நான்கு ஆண்டுகளை நிறைவு செய்து தற்போது ஐந்தாவது ஆண்டில் என் தலைமையிலான ஆட்சி அடியெடுத்து வைத்துள்ளது. இரத்தத்தை வேர்வையாக சிந்தி சிந்தி உழைக்கும் வர்க்கமான விவசாய வர்க்கத்தைச் சேர்ந்த விவசாயி நான் என்பதால் எந்த பணியை கொடுத்தாலும் தொடர்ச்சியாக எவ்வித இடையூறுக்கும் அஞ்சி விடாமல் தொடர்ந்து பணியாற்றி வந்துள்ளேன்.
நான் பொறுப்பேற்கும் போது தமிழகத்தில் கடுமையான வறட்சி நிலவியது. பொதுமக்கள் வறட்சியால் பாதிக்கப்பட்ட இந்த சூழலில் அதனை மாற்றி அமைக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்ட பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. கடந்த இரண்டு வருடத்திற்கு முன்பு என்னுடைய குடும்பத்தில் இருந்து யாரும் அரசியலுக்கு வர மாட்டார்கள் என்று தெரிவித்த ஸ்டாலின் இன்று அவரது மகன் உதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்துள்ளார்.
தமிழகத்தில் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். கடந்த கால திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, கட்டப்பஞ்சாயத்து செய்து நாட்டை கொள்ளை அடிக்கும் பணியில் திமுகவினர் ஈடுபட்டிருந்தனர்.
அதுபோன்றதொரு அராஜக அரசு அமைந்து விடாமல் தடுக்கும் வகையில் வாக்காளர்கள் அதிமுகவிற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்