தலைமை யாருக்கு : எடப்பாடி பழனிசாமியின் மேல்முறையீடு வழக்கு இன்று விசாரணை
எடப்பாடி பழனிசாமியின் மேல்முறையீடு வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.
பொதுக்குழு கூட்டம்
அ.தி.மு.க.வின் பொதுக்குழு கூட்டம் கடந்த ஜூலை 11-ந்தேதி நடந்தது. இதற்கு தடை விதிக்கக்கோரி ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினரான வைரமுத்து ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் செல்லாது என்றும், ஜூன் 23-ந்தேதிக்கு முன்பு இருந்த நிலை கட்சியில் தொடர வேண்டும் என்றும் தீர்ப்பு அளித்தார்.
இன்று விசாரணை
இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கில் தங்களது தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகே உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த நிலையில் தனி நீதிபதியின் சான்றளிக்கப்பட்ட உத்தரவு நகல் இல்லாமல் இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பில் கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மூத்த வக்கீல் விஜய் நாராயண் ஆஜராகி, மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்க வேண்டும் என்று வாதிட்டார் .
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் மேல்முறையீட்டு மனு இன்றுவிசாரணைக்கு வருகிறது, இதில் இரு தரப்பினரும் தங்கள் தரப்பு வாதங்களை வைக்க உள்ளனர்.