தமிழகம் போதைப்பொருட்கள் நிறைந்த மாநிலமாக மாறியுள்ளது - ஈபிஸ் குற்றச்சாட்டு!
கள்ளச்சாராய சம்பவத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி
தமிழக சட்டசபையில் கேள்வி நேரத்தை ஒத்திவைத்து, கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்தக்கோரி அதிமுகவினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து அவர்களை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டதை அடுத்து, அதிமுகவினர் வெளியேற்றப்பட்டனர்.

இதனையடுத்து, எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து, கள்ளச்சாராயம் விவகாரம் தொடர்பாக மனு அளித்தனர். அப்போது, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட நடவடிக்கை எடுக்குமாறு அதிமுக தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
நியாயமாக விசாரணை
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி "கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணம் மிக மோசமானது. ஆளுங்கட்சியினர் ஆதரவு இல்லாமல் கள்ளச்சாராயம் விற்பனை நடைபெற வாய்ப்பு இல்லை.

மரக்காணம் கள்ளச்சாராய வழக்கை சிபிசிஐடி விசாரித்தது. அது பலனளிக்கவில்லை. ஒரு நபர் விசாரணை ஆணையம் மூலம் நியாயம் கிடைப்பது சந்தேகம்தான். உளவுத்துறை தோல்வி அடைந்து விட்டதா? போதைப்பொருட்கள் நிறைந்த மாநிலமாக தமிழகம் மாறியுள்ளது. மாநில போலீசார் விசாரித்தால் நியாயம் கிடைக்காது.
கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும். கள்ளச்சாராய சம்பவத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும். சிபிஐ விசாரித்தால் மட்டுமே நியாயமாக விசாரணை நடைபெறும்" என்று தெரிவித்துள்ளார். 
 
                     
                                                 
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    