நான் தவழ்ந்து தவழ்ந்து முதலமைச்சரானேனா? பாஜகவுடன் இனி கூட்டணி இல்லை - எடப்பாடி பழனிசாமி!
நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க-வுடன் கூட்டணி இல்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி
மதுரையில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில மாநாடு தொடங்கியது. இதில் சிறப்பு அழைப்பாளராக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர் "எஸ்.டி.பி.ஐ மாநாட்டின் கூட்டத்தை பார்க்கும்போது அ.தி.மு.க வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது தெரிகிறது. தி.மு.க கூட்டணி மதச்சார்பின்மையை கடைபிடித்து வருவதாக போலி தோற்றத்தை உருவாக்கி வருகிறார்கள். நான் முதலமைச்சராக ஆவேன் என கனவில் கூட நினைக்கவில்லை.
நான் தவழ்ந்து தவழ்ந்து முதலமைச்சரானேன் என்று என்னுடைய வளர்ச்சியை மு.க.ஸ்டாலின் கொச்சைப்படுத்தி பேசுகிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உழைப்பென்றால் என்னவென்று தெரியாது, நான் கட்சியில் கடுமையாக உழைத்து கிளைச் செயலாளரிலிருந்து பொதுச்செயலாளராகவும், முதலமைச்சராகவும் வந்தேன்.
கூட்டணி கிடையாது
ஆனால், மு.க.ஸ்டாலின் கருணாநிதியால் முதலமைச்சராகவும் திமுக தலைவராகவும் வந்துள்ளார். நாட்டு மக்களைப் பற்றி கவலைப்படாமல் வீட்டு மக்களைப் பற்றி கவலைப்படும் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் இருந்து வருகிறார்" என்றார்.
மேலும் பேசிய எடப்பாடி பழனிசாமி "நாட்டு மக்களுக்காக சூழ்நிலை கருதி பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்தோம், அ.தி.மு.க பா.ஜ.க-வுடன் இனி கூட்டணி இல்லை என அறிவித்து விட்டோம், கூட்டணியிலிருந்து வெளியே வந்ததை முதலமைச்சர் ஸ்டாலினால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
கூட்டணியிலிருந்து வெளியே வந்த போதிலும் முதலமைச்சர் ஸ்டாலின் அ.தி.மு.க-வையும், பா.ஜ.க-வையும் தொடர்புபடுத்தி பேசி வருகிறார். எதிர்வரும் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க-வுடன் கூட்டணி இல்லை என திட்டவட்டமாக அறிவிக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.