வாரிசுக்கு முடி சூட்ட நினைக்கும் ஸ்டாலினின் ஆசை நிறைவேறாது - எடப்பாடி பழனிசாமி
கூட்டணி அமைக்காமல் வெற்றி பெற்ற ஒரே கட்சி அதிமுகதான் என எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். +
செயற்குழு பொதுக்குழு கூட்டம்
சென்னை வானகரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அக்கட்சியின் செயற்குழு - பொதுக்குழு கூட்டம் இன்று(15.12.2024) நடைபெற்றது.
இதில் அதிமுக மூத்த நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், பொதுக்குழு செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
எடப்பாடி பழனிசாமி
அதன் பின்னர் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த பிறகு பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. அதில் கூட்டணி ஒன்று அமையவில்லை என்பது ஒன்று. கூட்டணி என்பது, அவ்வப்போது வரும் போகும். ஆனால் அதிமுகவின் கொள்கை நிலையானது.
எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்காமல், 234 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு ஆட்சி அமைத்த வரலாறு அதிமுகவிற்கு மட்டுமே உண்டு. 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெறும் 1.98 லட்சம் வாக்குகள் குறைவாகப் பெற்ற காரணத்தினால் தான் ஆட்சிக்கு வரமுடியவில்லை.
பெரிய வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி பெறவில்லை. பெரிய கூட்டணி அமைத்த திமுக 26.5%வாக்குகளையே பெற்றது. 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் கொடுத்து பச்சைப் பொய் சொல்லி மக்களை ஏமாற்றிய கட்சி திமுக தான். தமிழகத்தின் நிதி நிலைமையை அதள பாதாளத்திற்கு கொண்டு சென்றுவிட்டார்கள். 200 தொகுதிகளில் வெற்றி என்கிற திமுக கனவு நனவாகாது.
கருணாநிதி குடும்பம்
தேர்தல் நேரத்தில் அனைவரும் எதிர்பார்க்கும் கூட்டணி நிச்சயம் அமையும். கடந்த மக்களவை தேர்தலிலும் இதையே சொன்னேன் என்று உங்களில் பலர் நினைக்க கூடும். ஆனால் நாடாளுமன்றத் தேர்தல் வேறு, சட்டமன்றத் தேர்தல் வேறு. அதிமுக தலைமையில் தொண்டர்கள், மக்கள் எதிர்பார்க்கும் கூட்டணி அமையும். ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் அதிகார போதையில் பேசுபவர்களுக்கு தகுந்த பதிலடியை தருவோம். குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம்.
கருணாநிதி குடும்பம் என்ன மன்னர் குடும்பமா? மன்னர் ஆட்சியில்தான் அப்பாவுக்கு பிறகு மகனுக்கு முடி சூட்டுவார்கள் வாரிசுக்கு முடி சூட்ட நினைக்கும் ஸ்டாலினின் ஆசை நிறைவேறாது. 234 தொகுதிகளிலும் சுற்றுப் பயணம் சென்று ஆட்சியின் அவலத்தை எடுத்துச் சொல்வோம். 2026இல் மக்கள் விரோத ஆட்சியை அகற்ற சூளுரை ஏற்க வேண்டும். 2026 இல் நமக்கு ஒரு பொற்காலம் காத்துக் கொண்டிருக்கிறது.
நிச்சயம் அதிமுக ஆட்சிக்கு வரும். ஒற்றுமை என்பது மிகப்பெரிய பலம். யானைக்கு பலம் தும்பிக்கை; நமக்கு பலம் நம்பிக்கை. நம்பிக்கை என்பது மிகப்பெரிய ஆயுதம். அந்த நம்பிக்கை இருந்தால், நிச்சயம் ஒவ்வொருவரும் வாழ்க்கையில் வெற்றி பெறலாம்" என பேசினார்