சொத்துக்களை காப்பாற்றிக் கொள்ள 'வெல்கம் மோடி' என்கிறார் ஸ்டாலின் - ஈபிஎஸ் தாக்கு!

Tamil nadu ADMK Edappadi K. Palaniswami Thanjavur Lok Sabha Election 2024
By Jiyath Apr 07, 2024 06:02 AM GMT
Report

கூட்டணி கட்சிகளின் தயவில் மு.க.ஸ்டாலின் ஆட்சி நடத்துவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.  

எடப்பாடி பழனிசாமி

தஞ்சாவூர் மக்களவை தொகுதியில் அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேமுதிக சார்பில் சிவநேசன் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து தஞ்சாவூர் திலகர் திடலில் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது.

சொத்துக்களை காப்பாற்றிக் கொள்ள

இதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு சிவநேசனுக்கு வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர் "இந்த தொகுதியில் அதிமுக போட்டியிட்டால் எப்படி வேலை செய்வீர்களோ, அதே போல் தேமுதிக வேட்பாளருக்கும் அதிமுகவினர் வேலை செய்து, பல லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும். தஞ்சாவூர் பகுதி செழித்தால் தான் தமிழகமும் செழிக்கும்.

ஆனால் இங்குள்ள விவசாயிகளுக்கு எந்த ஒரு திட்டத்தையும் திமுக அரசு வழங்கவில்லை. நான் முதல்வராக இருந்தபோது வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் நிலையை உணர்ந்து, வறட்சி நிவாரணம் வழங்கினேன். விவசாயிகளை கண் இமை காப்பது போல் அதிமுக அரசு காத்தது. ஆனால் திமுக ஆட்சியில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை கொண்டு வந்து டெல்டாவை அழிக்க பார்த்தார்கள்.

வெல்கம் மோடி

ஸ்டாலின் முன்பு "கோ பேக் மோடி" என்றார். ஆனால் அவரையும், அவரது சொத்துக்களையும் காப்பாற்றிக் கொள்ள தற்போது "வெல்கம் மோடி" என்கிறார். அவர் ஒரு கோழை. கூட்டணி கட்சிகளின் தயவில் ஆட்சியை நடத்துகிறார்.

சொத்துக்களை காப்பாற்றிக் கொள்ள

அதிமுக ஆட்சியில் குறுவை சாகுபடிக்கு பயிர் காப்பீடு திட்டம் அமல்படுத்தப்பட்டது. ஆனால் திமுக ஆட்சிக்கு வந்த முதல் அந்த திட்டம் கைவிடப்பட்டு, விவசாயிகள் வஞ்சிக்கப்பட்டனர். அதே போல் காவிரி நீர் மாசுவை கட்டுப்படுத்த ரூ.17 ஆயிரம் கோடியில் "நடந்தாய் வாழி காவிரி" என்ற திட்டம் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. அந்த திட்டத்தை இன்று வரை திமுக அரசு அமல்படுத்த முயற்சிக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. திமுக அரசு வந்த நாள் முதல் விவசாயிகளுக்கு விதை, உரம் இப்படி எந்த உதவியும் கிடைக்கவில்லை.

திமுக தேர்தல் அறிக்கையில் கூறியது போல் நெல்லுக்கும், கரும்புக்கும் உரிய விலை கிடைக்கவில்லை. இதையெல்லாம் கேட்டால் செவிடன் காதில் ஊதிய சங்கு போல உள்ளது. திமுக ஆட்சிக்கு வந்த நாள் முதல் மின் கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு, வீட்டு வரி உயர்வு என அனைத்து வரிகளையும் உயர்த்தி மக்களை துன்பத்தில் தள்ளியுள்ளனர். இதிலிருந்து விடுபட வேண்டுமானால் நீங்கள் அதிமுக கூட்டணி வேட்பாளரை ஆதரிக்க வேண்டும்” என்றார்.