என்னை யாரும் அடிமைப்படுத்த முடியாது - எடப்பாடி பழனிசாமி ஆவேசம்
ஒரு விவசாயியாக நான் எனது பிறவிப்பயனை அடைந்து விட்டேன் என எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி
அத்திகடவு - அவிநாசி திட்டத்திற்கு, அதிமுக ஆட்சி காலத்தில் அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். இந்த திட்டம் கடந்த ஆகஸ்ட் மாதம் பயன்பாட்டுக்கு வந்தது.
இந்த திட்டத்தை நிறைவேற்றியதற்காக கோவை அன்னூர் பகுதியில் முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் விவசாய சங்கங்கள் கூட்டமைப்பு பாராட்டு விழா நடத்தியது.
அத்திகடவு - அவிநாசி திட்டம்
இந்த விழாவிற்கு, காளைகள் பூட்டிய மாட்டு வண்டியில் எடப்பாடி பழனிசாமி வருகை தந்தார். தொடர்ந்து நிகழ்வில் பேசிய அவர், "ஒரு விவசாயியாக தொடங்கி முதலமைச்சராக ஆவேன் என கனவிலும் நினைத்தது இல்லை. ஒரு விவசாயியாக நான் எனது பிறவிப்பயனை அடைந்து விட்டேன்.
அத்திக்கடவு - அவிநாசி திட்டத்திற்கு எதுவும் செய்யாமலேயே வந்து திறந்து வைப்பவர்களும் உள்ளனர். விவசாயிகளின் பங்களிப்போது இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டது. உழைப்பது விவசாயிகள். ஆனால் அனுபவிப்பது வேறு ஒருவர்.
விவசாயிகளின் கனவை நிறைவேற்ற மத்திய அரசை எதிர்பார்க்காமல், மாநில அரசு நிதியில் இருந்தே திட்டத்தை நிறைவேற்ற உத்தரவிட்டேன். நான் யாருக்கும் அடிமையாக மாட்டேன். பணத்தாலும் பொருளாலும் என்னை யாரும் அடிமைப்படுத்த முடியாது" என பேசினார்.