பாஜகவுடன் கூட்டணி ஆட்சியா? அமித்ஷா பேசியது என்ன? எடப்பாடி பழனிசாமி விளக்கம்
பாஜக உடன் கூட்டணி ஆட்சியா என்ற கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி
2026சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு ''மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்'' என்ற பெயரில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தீவிர சுற்றுப் பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில், இன்று சிதம்பரத்தில் விவசாயிகள் மற்றும் விவசாயிகள் சங்க பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடினார்.
அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், பாமக அதிமுக கூட்டணிக்கு வந்தாலும் வரலாம் என்றுதான் நேற்று கூறினேன். தற்போது பாமக அதிமுக கூட்டணியில் இல்லை.
திமுக கூட்டணி வைத்தால் நல்ல கட்சி ஆனால் அதிமுக கூட்டணி வைத்தால் அது மதவாத கட்சி ஆகிவிடுமா?
கூட்டணி ஆட்சியா?
எங்கள் கூட்டணியே ஆட்சி அமைக்கும் என்றுதான் அமித்ஷா சொன்னார். கூட்டணி ஆட்சி என்று சொல்லவில்லை.
நீங்கள் தவறாக புரிந்து கொண்டால் நான் பொறுப்பாக முடியாது. நான் தான் தெளிவாக கூறி வருகிறேன். அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.
இந்த கூட்டணிக்கு தலைமை தாங்குவது நான்தான். நான் எடுப்பது தான் முடிவு. அப்படியானால் யார் முதலமைச்சர்? யார் ஆட்சி அமைப்பார்கள்? என்பதை நாங்கள் தெளிவுபடுத்திவிட்டோம்.
எடப்பாடி பழனிசாமி யாருடனும் கூட்டணி வைக்க மாட்டார் என்று ஸ்டாலின் நினைத்துகொண்டிருந்தார். ஆனால் நான் பாஜகவுடன் கூட்டணி வைத்தவுடன் ஸ்டாலினுக்கு பயம் வந்துவிட்டது.
முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, பிரதமர் மோடிக்கு எதிராகக் கறுப்பு பலூன் காட்டினார். ஆனால், தற்போது ஆட்சிக்கு வந்ததும் மோடிக்கு வெள்ளைக் குடை பிடிக்கிறார். பணத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காக பாஜகவை பார்த்து ஸ்டாலின்தான் பயப்படுகிறார்" என பேசினார்.