பதவியேற்பு நிகழ்ச்சியில் ஓபிஎஸ் - இபிஎஸ் நேருக்கு நேர் சந்திப்பு? - வெளியான தகவல்
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதன் காரணமாக ஓபிஎஸ்- இபிஎஸ் என இரு பிரிவாக அதிமுகவி பிளவு ஏற்பட்டுள்ளது.
பதவியேற்பு நிகழ்ச்சி
இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் பிரியா விடை நிகழ்ச்சி நாளை மறுதினம் நடக்க இருக்கிறது. இதனையடுத்து, டெல்லியில் வரும் 25ம் தேதி புதிய குடியரசு தலைவர் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நாளை சென்னையிலிருந்து டெல்லிக்கு எடப்பாடி பழனிசாமி செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் நிகழ்ச்சியின்போது, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை இபிஎஸ் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
ஓபிஎஸ்- இபிஎஸ் நேருக்கு நேர் சந்திப்பு
இந்நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஓபிஎஸ் இன்று மாலை சிகிச்சை முடிந்து வீடு திரும்ப உள்ளார்.
தற்போதைய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வழியனுப்பு விழாவில் கலந்து கொள்ளாமல் புதிய குடியரசு தலைவர் பதவியேற்பு விழாவில் ஓபிஎஸ் கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்நிகழ்ச்சிகளில் ஓபிஎஸ்- இபிஎஸ் நேருக்கு நேர் சந்திக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.